தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் இன்றும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நமது நினைவுக்கு வருவது செங் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடித்து சுவைப்பதில் தனி பிரியம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற காந்தி மார்க்கெட் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே களை கட்டத்தொடங்கி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கரும்பு, மஞ்சள், வெல்லம், மண் பானைகள் மற்றும் காய்கறிகள் வாங்கி சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கடந்த வாரமே வந்து குவியத்தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் பொங்கலை கொண்டாடினர்.




ஆனால் தற்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லாத நிலையில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கடந்த 2 நாட்களாக  பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப் பட்டது. மாநகர போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல் இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளதால் கரும்பு, மஞ்சள் கொத்து வரத்து அதிகரித்துள்ளது. செங்கரும்புகள் திருச்சி மாவட்டம் திருவளர்ச் சோலை, கிளிக்கூடு, உத் தமர்சீலி, பனையபுரம் ஆகிய பகுதியில் இருந்தும் கரூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.  பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் பாரம்பரியமிக்க மண்பானைகள் அதிக இடங்களில் வர்ணம் தீட்டப்பட்டு விற்கப்பட்டன. மக்களிடம் காணப்பட்ட மாற்றமும், விழிப்புணர்வுமே இதற்கு காரணம் என்று பானை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதேபோல் வெண்கல பானைகள் வாங்கவும் பாத்திரக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.




குறிப்பாக தலைப்பொங்கல் பண்டிகை கொண்டாடும் தம்பதியருக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். பொங்கல் படையலில் முக்கிய இடம்பிடிக்கும் வாழை இலை, பழம், தேங்காய், இஞ்சி விற்பனையும் களை கட்டியது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. திருச்சி காந்தி மார்க்கெட் மட்டுமின்றி உறையூர், தென்னூர் உழவர்சந்தை, தில்லைநகர் சாஸ்திரிசாலை, ஸ்ரீரங்கம் பூச்சந்தை, மெயின் கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலைய பின்புற சாலை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, கருமண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை நடைபெற்றது. இப்பகுதிகளில் பொருட்கள் விற்க தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொங்கல் பானை ரூ.100 முதல் ரூ.250, ரூ.300 வரையும், செங்கரும்பு (12 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.500 வரையிலும்), ஒரு ஜோடி ரூ.100 முதல் ரூ.120 வரையும், மஞ்சள் கொத்து ரூ.20 முதல் ரூ.30 வரையும் விற்கப்பட்டது. குறிப்பாக மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000, முல்லைப்பூ ரூ.2,000, ஜாதிப்பூ ரூ.1,500, காக்கரட்டை பூ ரூ.1,000, செவ்வந்தி பூ ரூ.250, அரளிப்பூ ரூ.600 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.