தஞ்சாவூர்: திருச்சி நகர சாலைகளில் காலைவேளையில் பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. படிகளில் தொங்கிக் கொண்டு மாணவர்கள் பயணம் செய்வதால் இருசக்கர வாகன ஓட்டுனர்களும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு தீர்வாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Continues below advertisement

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி பகுதியில் 430 பேருந்துகளில் சுமார் 278 பேருந்துகள் நகரத்தில் இயக்கப்படுகின்றன. இத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டும் கூட்டம் அதிகமாக உள்ளது. முக்கியமாக மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை காலை வேளையில் அதிகம் உள்ளதால் பேருந்துகள் நிரம்பி செல்கின்றன. இதனால் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி கொண்டு செல்கின்றனர். இலவச பயண வசதி காரணமாக அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் ஒரு காரணம் ஆகும்.

 திருச்சி நகரத்தில் அரசு பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். இதற்கு இலவச பயண வசதி ஒரு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 1996ம் ஆண்டு தமிழகத்தில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது. 2021ம் ஆண்டு மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

Continues below advertisement

காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும். "இலவச பேருந்து சேவை ஒரு நல்ல விஷயம். ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருப்பது சரியல்ல என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குகின்றனர் என்றாலும் சில மாணவர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் பேருந்து நடத்துனர், ஓட்டுநர்களின் அறிவுரையை கேட்பதில்லை. பேருந்தில் இடம் இருந்தும் சாகசம் செய்வதற்காக படிக்கட்டில் பயணம் செய்கிறார்கள். இதனால் தடுமாறி விழுந்தால் பின்னால் வரும் வாகனங்களில் மோதி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்பாலான பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக கதவுகள் திறந்தே இருக்கின்றன. "பழுதடையும் நிலையில் உள்ள பேருந்துகளைத் தவிர, மற்ற அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன" என்று அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

அதிகாரிகள் முக்கியமான இடங்களில் சோதனை செய்கிறார்கள். அதிகாலை நேரங்களில் சோதனை அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் ஆய்வாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை கண்காணிக்கிறார்கள். பேருந்து கதவுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்கிறார்கள். இருப்பினும் அனைத்து வழித்தடத்திலும் இந்த சோதனையை செய்ய இயலாத நிலைதான் உள்ளது. மாணவர்களை கண்டித்தால் அதுவும் வேறு விதத்தில் பிரச்னையாகிறது.

இந்த பிரச்சினையை போக்க ஒரே வழி கூடுதல் பேருந்துகள் இயக்குவதுதான்.என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்தெந்த வழித்தடங்களில் மாணவர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்களோ, அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அல்லது பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  மாணவர்கள் அதிகமாக பயணம் செய்யும் வழித்தடங்களில் ஆய்வு செய்து, காலை, மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். அல்லது அந்த வழித்தடத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர். அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா?

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கே. தாசரதன் கூறுகையில்,  பேருந்து ஓட்டுநர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தவறு செய்தால், அந்த விஷயத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். காலை பிரார்த்தனையின்போது மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வலியுறுத்தி உள்ளோம். மேலும் அரசு போக்குவரத்து கழக  ஊழியர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள் என்றார்.

எது எப்படி இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி அரசும், அதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.