திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும், அதிகாரிகளிடம் சிக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புடைய தடை செய்யப்பட்ட உயர் ரக கஞ்சாவை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமான வின நிலையமாக மாறி வருகிறது. அதிகளவில் பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியவகை அணில் குரங்கு கடத்தப்பட்டு வந்து பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருச்சிக்கு வரும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், விமான நிலையம் முழுவதும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக திருச்சிக்கு பயணிகள் விமானம் வந்தது. இதில், வந்த பயணிகளின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடமையில், 11.8 கிலோ எடை கொண்ட 28 பாக்கெட்டுகள் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரிடமிருந்து சுமார் ரூ.12 கோடி மதிப்புடைய கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, தடை செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா எப்படி கடத்தி வரப்பட்டது? கஞ்சாவை விற்பனை செய்து அதில் பெறக்கூடிய பணம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறதா? என பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக பயணிகள் வரக் கூடிய பெரிய விமான நிலையமாகும். சமீபகாலமாக, இங்கு வெளிநாட்டு விலங்குகள், தங்கம், போதை பொருட்கள், சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டும், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் போதைப்பொருட்கள் உட்பட கடத்தல் பொருட்களை தடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.