திருச்சியை பொறுத்தவரை ஆறுகள், அருவிகள் இருந்தாலும் இது போன்ற சிறிய இடங்களும் மனதிற்கு நிறைந்த மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமைந்துள்ளது இந்த 'தொட்டி பாலம்' என்று அழைக்கப்படும் 'ஆறுகண் பாலம்'. இதை பற்றி திருச்சியில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மனச்சோர்வு மற்றும் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பட்டாளம் முதல் குடும்பங்கள் வரை ஒரு சிறந்த பொழுது போக்கு இடமாக மாறியிருக்கிறது இந்த பாலம். திருச்சியின் மையப்பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் அருகில் உள்ள 'ஆறுகண் பாலம்' என்று அழைக்கப்படும் இடம் தான் தற்போது 'தொட்டி பாலம்' என்று அழைக்கப்படுகிறது. காவிரியில் இருந்து பிரிந்து வரும் உய்யக்கொண்டான் கால்வாய் நீரும், புதுக்கோட்டையில் இருந்து உருவாகி ஓடி வரும் கோரை ஆற்று நீரும் ஒன்றாக சேரும் இடத்தில் மதகுகள் அமைக்கப்பட்டன. ஆறு மதகுகள் இருந்த காரணத்தினால் ஆறுகண் பாலம் என்று அழைக்கப்பட்டதாக கூறினாலும், இதற்கான சான்றுகள் பெரிதாக இல்லை. மேலும் மதகுகள் வழியே உய்யக்கொண்டான் வாய்க்காலில் திறந்து விடப்பட்ட நீர், மற்றொரு பக்கத்தில் உபரியாக வெளியேறும் நீர், குழுமாயி அம்மன் கோவில் அருகில் இயற்கையுடன் இணைந்து நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, குடமுருட்டி ஆறாக ஓட இளைஞர்களும், பொது மக்களும் அதில் மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்கின்றனர். 




ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது என கூறப்படும் உய்யக்கொண்டான் கால்வாய், பல பெருமைகளை உள்ளடக்கியது. திருச்சியின் வரலாற்று சின்னங்களில் ஒன்றான குழுமாயி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைய பெற்றிருக்கிறது இந்த ஆறுகண் பாலம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மிகவும் எளிதான வழியில் சுலபமாக சென்று இந்த பாலத்தை அடையலாம். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்ப்பதற்கு குளுமையாகவும் அமைதியாகவும் இருக்கும் இந்த பாலம் உண்மையிலேயே சிட்டிக்குள் தான் இருக்கின்றோமா என்று யோசிக்க வைக்கும் வகையில் இயற்கை அழகுடன் அமைந்திருக்கிறது. குழுமாயி அம்மன் கோவிலின் பின்புறம் இயற்கையாய் அமையப்பெற்ற அருவியும் அது வழிந்து ஓடும் குடமுருட்டி ஆறு உள்ளது.


'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பொழுதுபோக்கிற்காக இங்கு பூங்காக்களும் வர இருப்பதால் மிக அழகான ஒரு இடமாக இது மாற இருக்கிறது. வார இறுதி நாட்கள் மட்டும் அல்லாமல், வார நாட்களிலும் உள்ளூரில் உள்ளவர்கள் இங்கு வந்து மகிழ்ச்சியாக தங்களது நேரத்தை கழிக்கின்றனர். அதுவும் நண்பர்களுடன் வரும்போது உற்சாகத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். அருகிலுள்ள அனுமன் கோவில் மற்றும் குழுமாயி அம்மன் கோயில்களுக்கு மட்டுமல்லாமல் இங்கிருக்கும் மற்ற கோயில்களில் தரிசனத்திற்காக வருபவர்களுக்கும் இந்த இடம் சிறந்த மனதை இதமாக்கும் இடமாக இருக்கிறது. கடவுள் தரிசனத்தை காண வந்தவர்களுக்கு இயற்கையின் தரிசனமும் கிடைக்கிறது.




இங்கு வழிந்து வரும் நீரின் அருவியில் குளித்து விட்டு, அருகில் உள்ள மரங்களின் நிழலில் ஓய்வு எடுக்கும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. திருச்சியின் மையப்பகுதியில் இருந்தாலும் சிறிதளவு மக்களுடன் வெயிலும், மழையும் இல்லாத கால சூழ்நிலையுடன் மரங்கள் நிறைந்த இந்த சிறிய அருவி நீரின் சத்தம் வசீகரிக்க செய்கிறது. கூடவே நீரின் குளுமை இதமானதாக இருக்கிறது. பல அருவிகள், ஆறுகள் என நீராடி இருந்தாலும் உள்ளூரில் இருக்கும் இது போன்ற சிறிய விஷயங்களில் தான் மகிழ்ச்சியே நிறைந்துள்ளது. ஆலமரமும், அரச மரங்களும் நிறைந்த இந்த இடத்தில் பலரும் வீட்டிலிருந்து உணவுகளை கொண்டு வந்து இங்கு சாப்பிடுகின்றனர். பலதரப்பட்ட மக்களுடன் இந்த இடமே வேறு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. 




மேலும், தனது நண்பர்களுடன் இங்கு பொழுதை கழிக்க வந்த ஒருவரிடம் பேசியபோது, திருச்சிக்குள் எங்காவது சுற்றி பார்க்க செல்லவேண்டும் என்று தோன்றினால் நண்பர்களுடன் இங்கு வந்து செல்வோம் என்று தெரிவித்தார். மேலும், பொதுவாகவே சிட்டிக்குள் இருந்தால் இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல, பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இது மிக அருகில் இருப்பதனால் நினைக்கும் நேரத்தில் எல்லாம் இங்கு வந்து செல்ல முடிகிறது. இங்கு வரும்போது மனதிற்கு இதமாகவும், மிக மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதுவும் நண்பர்களுடன் வந்தால் அவர்களுடன் பொழுது போவதே தெரியாது அந்த அளவுக்கு மகிழ்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கும் என்று கூறினார். எனவே மொத்தத்தில் கடவுள் தரிசனத்தையும், இயற்கை தரிசனத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொண்டு நன்றாக சுற்றி பார்த்து பொழுதை கழிக்க பெஸ்ட் ஸ்பாட் இந்த 'தொட்டிப்பாலம்'.