திருச்சியில் இருந்து தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னைக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிக அளவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. 


திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே செல்வதால், அங்கிருந்து கோயம்பேடு, எக்மோர் , கிண்டி, கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


ஆகையால் தனியார் பேருந்துகள் சில கோயம்பேடு மற்றும் எக்மோர் வரை செல்வதால், பயணிகள் அதிக அளவில் தனியார் பேருந்துக்களை தேர்வு செய்து ,திருச்சியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து வருகிறார்கள்.




தனியார் பேருந்து திடீர் தீ விபத்து - 27 பயணிகள் உயிர் தப்பினர்.


இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது.


மேலும், சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால், பேருந்தில் பயணம் செய்த 27 பேரும் உயிர் தப்பினர்.  சில மணி நேரம் கழித்து பயணிகள் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


பேருந்து  விபத்து குறித்து சமூக ஆர்வர்கள் தெரிவித்தது..


தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் தொகைக்கு ஏற்ப,  தனியார் பேருந்துகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் கடந்த சில வருடங்களாக அரசு பேருந்தில் பயணம் செய்வதை விட தனியார் பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.


ஏனென்றால் குறித்த நேரத்தில் விரைந்து நாம் சென்று விடலாம் என்ற எண்ணத்தோடும் தனியார் பேருந்துகளில் சில வசதிகள் ஏற்படுத்தியதால் பொதுமக்கள் அந்த பேருந்தையே தேர்வு செய்து பயணம் செய்கிறார்கள்.


நேற்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆன மன்னார்புர பகுதியில் தனியார் பேருந்து  தீ பற்றி எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆகையால் தனியார் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதேசமயம் அரசு அதிகாரிகளும் பேருந்துகளில் அனைத்து ஆவணங்கள் சரியாக உள்ளதா? பேருந்துகள் அனைத்தும் முறையான சர்வீஸ் செய்யப்பட்டு தரமான டயர்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 


அவ்வாறு அரசு விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இயக்கக்கூடிய பேருந்துகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களும், அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.