திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.


அப்போது சோலார் பேனல் பணிக்காக குழி தோண்டும் போது இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து தனியார் சோலார் பேனல் நிர்வாகத்தினர், துறையூர் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்.


இதனை தொடர்ந்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் 3 அடியிலான 2 சிலைகளையும் கைப்பற்றினர். அப்போது அது விஷ்ணு மற்றும் அம்பாள் சிலை என தெரியவந்தது.




இதை அடுத்து சிலைகள் இரண்டையும் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்து வந்தனர். குழி தோண்டும் போது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியது..


தனியார் நிறுவனம் தங்களது பணிகளுக்காக குழி தோண்டும்போது இரண்டு சிலை கிடைத்ததாக தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிலைகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த சிலை எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது. மேலும் சிலைகளை குறிக்க மற்ற விவரங்கள் அறிவதற்கு சிலைகளை பற்றி  ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் குறித்த முழு விவரங்கள் அறிந்தவுடன் முறைப்படி தமிழ்நாடு சிலை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் தெரிவித்தனர்.