திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே புளியஞ்சோலை மற்றும் கொல்லிமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யாற்றை நீராதாரமாக கொண்ட கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம், ஜம்பேரி, சிறுநாவலூர் ஏரி, பி.மேட்டூர், பாப்பான் குட்டைஏரி, ஆலத்துடையான்பட்டி சின்ன ஏரி, பெரிய ஏரி, ரெட்டியாப்பட்டி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி வழிகின்றது. ரெட்டியாப்பட்டியிலுள்ள தரைப்பாலம் பலவீனமடைந்ததால் புதியபாலம் கட்டுவதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஏரியில் நீர்வரத்து அதிகமானதால், நேற்று முன்தினம் இரவு மண் அரிப்பு ஏற்பட்டு தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையை சீரமைத்தனர். அதன்பின் நேற்று மாலை முதல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் உப்பிலியபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையால் இரண்டாம் பருவ நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அறுவடைப் பணிகளில் தேக்கம் ஏற்படுவதுடன் மகசூலில் பாதிப்பு எற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.






இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் (வயது 47). நேற்று காலை மாராடியில் நடந்த துக்க காரியத்துக்காக ஜான் காரில் சென்றார். காரை அவரே ஓட்டி உள்ளார். பின்னர் அவர் துக்க காரியம் முடிந்தவுடன் சொந்த வேலையாக நாமக்கல் நோக்கி சென்றார். அப்போது, ஜான் கட்டப்புளி அய்யாற்று தரைப்பாலத்தை கடக்க முயன்றார். சமீபத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால், கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒரு பாறையில் சிக்கி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் காரின் கதவை திறந்து தண்ணீரில் குதித்து கரையேறி உயிர்தப்பினார். பின்னர் கார் தண்ணீரில் மீண்டும் இழுத்து செல்லப்படாமல் இருக்க, ஜான் கிராம இளைஞர்கள் உதவியுடன் காரில் கயிறுகட்டி பாலத்தில் உள்ள காங்கிரீட் கட்டையில் கட்டி வைத்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆற்றில் சிக்கி இருந்த கார், ரோப் மூலம் கட்டப்பட்டு மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி இந்த தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுவதால் அங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும்  இந்த பகுதியில் பல ஏரிகள், குளங்கள் இருந்தாலும், சரியான முறையில் தூர்வாரதால் , ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என அனைத்து வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகமிடம்  கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகையால் விரைந்து இதுபோன்று இனிமேல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.