தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கடந்த 1958-ம் ஆண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருச்சி மாவட்டம், முசிறி வாத்தலை அருகே காவிரியின் தண்ணீர் சமயபுரம் புதூர் உத்தமனூர் வழியாக புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் மானோடை ஏரிக்கு வந்து நிறைவடைந்து, பின்னர் வெங்கனூர் ஆண்டி ஓடை ஏரி நிரம்பி 1,100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி ஏரிக்கு தண்ணீர் வரும். பின்னர் இறுதியாக சுக்கிரன் ஏரி சென்று தூத்தூர் அருகே கொள்ளிடத்தில் உபரி நீர் கலக்கிறது. திருமானூர் டெல்டா பகுதிகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், கம்பு, துவரை, எள், கடலை, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடிக்கும் பேருதவியாக இருந்து வருகிறது. இந்த ஏரியால் பயன்பெறும் விவசாய நிலங்கள் வெங்கனூர் கோவில் எசனை இலந்தைக்கூடம், கரைவெட்டி, ஆங்கியனூர், வேட்டைக்குடி, கரைவெட்டி, பரதூர், மேலக்காவட்டாங்குறிச்சி, கீழக்காவட்டாங்குறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான நீர்த்தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
மேலும் மழைக்காலங்களில் வரும் மருதையாற்று உபரி நீரை கரைவெட்டி ஏரிக்கு கொண்டு வர கிழக்கே சுக்கிரன் ஏரி வரை ஏறத்தாழ பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 27 நீர்நிலைகளிலும், தண்ணீரைச் சேகரிக்க இயலும். மேலும் இதனால் முப்போகமும் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பேருதவியாக இருப்பதோடு நிலத்தடி நீர் மட்டம் உயரும். கோடை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய இயலும். வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18 (1) இன் படியும் அரசு ஆணை எண்-219, சுற்றுச்சூழல் மற்றும் வனத் (FR.VI) துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது. இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். இந்த ஏரி, செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப்பெறுகிறது. எனவே கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி உள்ளிட்ட திருமானூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் அனைத்தையும் முழுமையாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுக்குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும். இச்சரணாலயத்தைப் பார்வையிட ஏற்ற காலம் அக்டோபர், மார்ச் மாதங்கள் ஆகும் என்றனர். மேலும் பொதுப்பணித்துறைக்கு சம்மந்தமான திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 27 ஏரிகளையும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து வாய்க்கால்களை தூர்வாரி பழுதடைந்த மதகுகள் சட்டர்களை சீரமைத்திட உறுதியான நடவடிக்கைகள் வேண்டும்” என்றனர். தூர்வாரப்பட்டால் இந்த பகுதியை சுற்றி இருக்கும் பல கிராமங்கள் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்கள். ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.