திருச்சி அரசு மருத்துவ மனையில் பொது மருத்துவம், இருதயவியல், குழந்தைகள் நலப்பிரிவு, மூளை நரம்பி யல், சிறுநீரகத்துறை, மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்ைட பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, மனநலப்பிரிவு, ஒட்டுறுப்பு பிரிவு, குடல்நோய் சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அதிநவீன சிகிச்சை பிரிவு, விபத்து அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 4,500 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள் நோயாளிகளாக 1,200 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளின் வசதிக்காக சி.டி,ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், வயிறு சம்பந்தப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன ஸ்கேன் வசதிகள் உள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருதயவியல், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, புற்று நோய் கட்டி அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்வதால் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கு இடமில்லாததால் தவித்து வருகின்றனர். 




இதற்கிடையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு மற்றும் பகலில் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனை டீன் நேருவிடம் இடவசதி குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இடவசதி குறித்து டீன் நேரு கள ஆய்வு செய்து இது குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து வார்டு எண்.26-க்குட்பட்ட புத்தூர் ஈவெரா சாலை, அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக தங்கும் இடம் கட்டும் பணிக்காக ரூ.79.70 லட்சத்திற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.  




மேலும் இந்த திட்ட மதிப்பீட்டு தொகை குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உரிய நிதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து திருச்சி மாநகராட்சியல் கடந்த 29-ந்தேதி நடத்த சாதாரண கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான உரிய நிதி அனுமதி பெறுவதற்கான கருத்துரு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனை முதல்வர் நேரு கூறுகையில், “தாய், சேய் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக அதன் அருகில் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. அது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓய்வுக்காக பழைய கட்டிடம் அருகே தீவிர சிகிச்சை வார்டு இருந்த இடம் அருகே சுமார் 3,500 சதுர அடியில் புதிய ஓய்வறை கட்டப்பட உள்ளது என்றார். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் அங்கு தங்குவதற்கு ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் சிறப்பான புதிய கட்டிடம் கட்டபட உள்ளது. மேலும் அரசினிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.