பெரம்பலூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. பகைவா்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவா்களுடன் காட்சியளிக்கும் இந்த கோட்டையானது, செஞ்சி கோட்டையை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. போதிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல்வேறு காலக்கட்டங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கோட்டையின் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவரில் மீன் சின்னமும், போா் வாள்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவா்களுக்கும் தொடா்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. 






கோட்டையின் மேல்புறத்தில் ராணியின் அந்தப்புரம், அதையொட்டி குளிக்கும் குளம், ஆயுத கிடங்கு, சுரங்க பாதைகள் என முடியாட்சி மன்னா்களின் அடையாளமாக விளங்கும் இக்கோட்டை, நவீனக்கால கட்டிடக் கலை வல்லுநா்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையில் கண்டறியப்பட்ட பீரங்கி குண்டுகள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கட்டிட கலையின் சிறப்பை பறைச்சாற்றும் இந்த நினைவுச் சின்னத்தை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ரஞ்சன்குடி கோட்டையை பெரம்பலூர் மாவட்டமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் கோட்டை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை வளாகத்தில் இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். 




இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறுகையில், பாதுகாக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் பராமரிப்பு, பாதுகாப்பு, கண்காணிப்பு இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் சீரழிந்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது கோட்டையின் தென்கிழக்கு மேல் பகுதியில் உள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் இங்கு வர பயப்படுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையின் அடையாளம் அழிந்து விடுவோம் என்ற அச்சம் அனைவரிடத்திலும் ஏற்படுகிறது. கோட்டையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரியும், நடவடிக்கை எடுத்த பாடில்லை. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக கோட்டையில் சேதமடைந்த சுவரை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த மழைக்கு சுவர் முழுவதும் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும் கோட்டை பராமரிக்கவும், அதன் வளாகத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், வளாகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தி சுற்றுலா தலமாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.