தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு என ஏராளமான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசின் மற்ற துறைகளை விட காவல் துறைக்கு கூடுதல் பணிச் சுமை இருந்தாலும், மக்களை காப்பாற்றும் பணியில் காவல்துறையினர் இரவு, பகலாக ,உழைத்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பெரும் தொற்று  காலகட்டங்களில் சுழற்சிமுறையில் விடுமுறை இல்லாமல் காவல்துறையினர் 24  மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வெயில் மழை என அனைத்து சூழ்நிலைகளிலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட காவல்துறைக்கு வார விடுமுறை என்பது இல்லை என்பது தான்  நிதர்சனமான உண்மையாக இருந்து வந்தது, இதனால் மன உளைச்சல், பணி சுமை போன்ற பல்வேறு காரணங்களால் சில காவலர்கள்  தற்கொலை முயற்சி ஈடுபட்டனர். இவற்றை முற்றிலும் போக்க வேண்டுமென்றால் காவல்துறையினருக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.




இந்நிலையில் திருச்சி மாநகரில் காவல் துறையில் பணியாற்றும் ஏட்டு முதல் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் வரை வாரம் ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்  காவல்துறையினர் பேரிடர் மற்றும் நெருக்கடி காலங்கள் மட்டுமல்லாது, எப்போதுமே தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவிட்டால் பணியில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் இதனால் காவல் துறையில் மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளால் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். விடுமுறை கிடைக்காத விரக்தியில் காவல்துறையினர் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இருந்தது. இது கருத்தில் கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை முதல் காவலர் முதல் ஏட்டு வரை உள்ளவர்கள் தொடர்ச்சியாக 6 நாட்கள் பணியாற்றினால் ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் இதுதவிர பிறந்தநாள், திருமணநாள், மற்றும் குடும்பத்தில் ஏற்படும் அசவுகாரியங்களுக்கும் வழக்கம் போல மேல் அதிகாரிகளின் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.




இந்த நடைமுறை காவல் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள  காவல் துறையினருக்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் நேற்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாரம் ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், ஓய்வெடுக்க எடுப்பவர்களுக்கு பதிலாக அந்த பணியில் சுழற்சிமுறையில் வேறு எஸ்.ஐக்கு  பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோல இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் ஞாயிற்று கிழமைகளில் பாதி நாள் ஓய்வு எடுத்து கொள்ளலாம் ஓய்வு எடுக்கும்போது சுழற்சிமுறையில் வேறு அதிகாரி அந்த பணியை கவனிக்க வேண்டும். யார் ஓய்வுக்கு செல்கிறார்கள் என்ற பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியல் சுழற்சிமுறையில் மாதத்தில் முதல் வாரம் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இதன் மூலம் காவல்துறையினர் உடல் மற்றும் மனநிலை பேணி பாதுகாக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காவல் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கோவையில் மட்டுமே இந்த முறை நடைமுறையில் உள்ள தாகும் அடுத்ததாக திருச்சி மாநகரில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.