உலகம் முழுவதும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 1 முதல் 31-ஆம் தேதி வரை பிங்க் அக்டோபர் அணுசரிக்கப்பட்டுகிறது. பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புதிதாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 6,85,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். காலநிலை, பொருளாதாரப் பின்னணி என எந்த வேறுபாடுகளுமின்றி பல பெண்களும் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.பெண்களைத் தவிர, 0.5 முதல் 1% ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி 13.9 லட்சமாக இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 2025-ம் ஆண்டு 15.7 லட்சமாக அதிரிக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிடன் நகரங்களில் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது.




பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சியின் மிக முக்கிய  அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை பிங்க் நிறமாக மாறும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் பிங்க் அக்டோபர் மாதம் என கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு கடைபிடிக்கப்படும் இந்த வாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய இடங்களில் மின் விளக்கை எரியச் செய்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் தனபாக்கியம் கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் பிங்க் வண்ண மின் விளக்குகள் ஒளிரச் செய்யும் "பிங்க் அக்டோபர்"என்ற நிகழ்ச்சி மலைக்கோட்டையில் நடைபெற்றது. 




பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் அக்டோபர் 1 முதல் 31-ஆம் தேதி வரை பிங்க் விளக்குகள் எரியூட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு விளக்கை ஒளிரச் செய்யும் சாதனத்தை இயக்கி வைத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ்,திமுக பகுதி கழக செயலாளர் மதிவாணன், வட்ட கழக செயலாளர் சரவண செல்வன், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் உதவி ஆணையர் விஜயராணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.