கரூர் மாவட்டம், வீரணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் விவசாயி. இவரது மகன் நவீன் குமார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்னும் விவசாயியின் மகன்கள் வசந்த் மற்றும் மயில் முருகன். 3 சிறுவர்களும் வீரணாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.




தொடர் விடுமுறை என்பதால் சிறுவர்கள் மூன்று பேரும் தினசரி ஆடு மேய்க்கச்செல்வது வழக்கம். இதேபோல இன்று இவர்கள் 3 பேரும் புனவாசிபட்டியில் உள்ள நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.




அப்போது அவர்கள் மேய்த்த ஆட்டுக்குட்டி அங்குள்ள தனியார் நிலத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்தது. அந்த ஆட்டை மீட்கச் சென்ற சிறுவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அருகில், இருந்தவர்கள் 3 சிறுவர்கள் உடலை மீட்டனர். இதையடுத்து லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் ஆடு மேய்க்கச்சென்ற சகோதரர்கள் உட்பட மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்தால் லாலாபேட்டை பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.


*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




லாலாப்பேட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து 3 சிறுவர்கள் உயிரிழந்த இடத்திற்கு வந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் உள்ளபோது கதறி அழுத சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட சமூக ஆர்வலர் கங்கா அவர்கள் தெரிவிக்கையில் :- தங்களது குழந்தைகளை விளையாட செல்லும் போதும் சரி, எங்கேயாவது வெளியில் சுற்றும்போதும் சரி, மிகுந்த கவனத்துடன் பிள்ளைகளை பார்த்துக்கொள்வது பெற்றோரின் தலையாய கடமையாக உள்ளது. தற்போது பள்ளி விடுமுறையால் மாணவர்கள் சற்று விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.






இந்நிலையில் உடல் ஆரோக்கியமான விளையாட்டில் தங்களது பிள்ளைகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது தொற்று பரவும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டும் எனவும், நீண்ட நேரம் அலைபேசியில் யூட்யூப்பில் கேமில் அதிக நேரம் செலவிடுவதை தங்களது பெற்றோர்கள்தான் பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். வாயில்லா ஜீவனை காப்பாற்ற முயற்சி செய்து 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் உயிரிழந்த சோக சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று சிறுவர்கள் உயிரிழப்புக்கு பின்னராவது பெற்றோர்கள் விழிப்புடன் தங்களது பிள்ளைகளை பேணி காக்க வேண்டும் என கரூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.