திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையில் ரமேஷ் (வயது 40), புண்ணியமூர்த்தி (30) ஆகிய 2 ஆசிரியர்களும் தங்களது சட்டையை கழற்றிவிட்டு, மேலாடை இன்றி ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக தொட்டு பேசுவது, அவருடன் சிரித்து அரட்டை அடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். பின்னர் இதுகுறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் இருவரும் வாத்தலை போலீசில் புகார் செய்தனர். அதில் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கூடம் வந்ததாகவும், அப்போது சட்டையை கழற்றி உலர்த்தியதாகவும், அதனை ஆசிரியையுடன் இணைத்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
மேலும், அங்கு ஏதேச்சையாக ஆய்வுக்கு வந்த முசிறி நீதிமன்ற நீதிபதி புகாரை பெற்றுக்கொண்டு திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, புகாருக்கு ஆளாகியுள்ள இரண்டு ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள். ஆகவே அவர்கள் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களா? அல்லது தற்போது எடுக்கப்பட்டதா? இப்போது எடுத்திருந்தால் அவர்கள் எதற்காக மீண்டும் அந்த பள்ளிக்கு சென்றார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்