அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர், ‘ஒற்றைத்தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியிலேயே வெளியேறினர். இதனால், தற்போது வரை அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பரபரப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்நிலையில் இபிஎஸ் தரப்பில் அதிக எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவு இருப்பதால் பொதுக்குழுவை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் வெடித்து வருகிறது.
மேலும், அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொள்ள, அதற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், இரட்டை இலையில் ஒரு இலையில் ஓ.பன்னீர்செல்வம், மற்றொரு இலையில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படத்துடன் "தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த சுவரொட்டிகள் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி தான் ஏற்க வேண்டும். ஓ.பி.எஸ் அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கிறார். இன்னும் சில நாட்களில் ஓ. பன்னீர்ச்செல்வம் பாஜகவில் இணைவார் என தெரிவித்து இருந்தார். இதனால் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக தொண்டர்கள் திருச்சி மாவட்டம் முழுவது போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த 2 சுவரொட்டிகளில் ஒன்றில் காலை ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. மற்றொரு சுவரொட்டியில் படத்தை கிழிக்க முயற்சிக்கப்பட்டிருந்தது. சுவரொட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கிழித்தது மர்ம நபர்களா? அல்லது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் திருச்சியில் அ.தி.மு.க.வினர் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ஆகையால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்