Trichy Panchapur Bus Stand: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் (Panjuppur Integrated Bus Terminus - IBT) என்பது திருச்சி மாநகராட்சியின் முக்கிய பொது போக்குவரத்து திட்டமாகும். திருச்சியில் போக்குவரத்து நெரிசல்  இருப்பதன் காரணமாக, பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே, திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய  2 பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. எனினும்  நெரிசல் காரணமாக,  3வதாக திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையம் திறப்பு நாள் அறிவிப்பு:

 திருச்சியில் உள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (IBT), நகரத்தின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.  இந்நிலையில், இன்று திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் கே.என், நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “ திருச்சி பஞ்சப்பூர் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையமானது வரும் மே மாதம் 9 ஆம் தேதி திறக்கப்படும். இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பேருந்து சேவையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அப்போது திறப்பு விழாவுக்கு தயாராகும் விதமாக பணிகள் அனைத்தையும் சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.

Also Read: நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது? எதனால்? யாருக்கு தேவையில்லை?

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் வசதிகள்:

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையமானது ரூ. 900 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டு வருகிறது எனவும், சுமார் 2 லட்சம் பயணிகளை கையாள முடியும் என தகவல் தெரிவிக்கின்றன. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள், கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Also Read: ” விண்வெளியில் இருந்து இந்திய மீனவர்களை பார்த்தால் இதுதான் தோன்றும்”- சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகிறார்!

இறுதி கட்டத்தில் பேருந்து நிலையம்:

திருச்சி பேருந்து நிலையத்தில் 401 பேருந்து நிறுத்தங்கள், 12 ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எஸ்கலேட்டர்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையவுள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இப்புதிய பேருந்து நிலையத்தின் அனைத்து கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுவிட்டதாகாவும், தற்போது தூய்மை பணிகள் நடைபெற்று வருவதாககவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், எப்போது வரும் மக்கள் காத்திருந்த நிலையில் வரும் மே மாதம் 9 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.