இந்திய கடல் பகுதிகளில் மீனவர்கள் படகுகளில் செல்லும் ஒளி விளக்கு காட்சிகள் தெரியும். அந்த காட்சிகளை பார்ர்த்ததுமே இந்தியா வந்துவிட்டோம் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம் என, சர்வதேச விண்வெளி  மையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்தியாவை ரசித்த சுனிதா வில்லியம்ஸ்:

நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியுமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல் முறையாக, நேற்றைய முன்தினம் ( மார்ச் 31 ) பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது, அவரிடம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்தியாவை பார்த்த போது, எப்படி இருந்தது  என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்ததாவது, “  நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமியைச் சுற்றிக் கொண்டு வரும்போது, பல முறை இமயமலையை, சக வீரரான  புட்ச் வில்மோர் படம் பிடித்தார். இமயமலை பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. குஜராத் மற்றும் மும்பை அருகே செல்லும்போது , அதன் கடல் பகுதிகளில் மீனவர்கள் படகுகளில் செல்லும் ஒளி விளக்கு காட்சிகள் தெரியும். அதன் ஒளி காட்சிகள், இந்தியா வந்துவிட்டோம் என்பதை உணர்த்தும். இரவிலும் மட்டுமல்ல பகல் பொழுதிலும் இந்தியா அழகாக இருந்தது. இதில் மிகப்பெரிய அழகே இமயமலைதான். இந்தியா ஒரு சிறந்த நாடு. இந்தியா தற்போது விண்வெளியில் மனிதர்களை அனுப்ப முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு , நான்  உதவி செய்ய விரும்புகிறேன். எனது அப்பாவின் நாடான இந்தியாவுக்குச் கண்டிப்பாகச் சென்று, அங்கு இருக்கும் மக்களை சந்தித்து உரையாடுவேன் என்று  தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் எப்போது இந்தியா வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு ஏன்?

சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. அமெரிக்காவின் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி  சோதனை செய்யும் திட்டத்தின்படி விண்வெளிக்குச் சென்றனர். இந்தத் திட்டத்தின்  நோக்கம், முதலில் எட்டு நாட்களில் பூமிக்கு திரும்பிவிடுவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தின் என்ஜினில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இருவரும் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் விண்வெளிகு பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த விண்கலத்திலேயே திரும்புவது பாதுகாப்பானது இல்லை என கருதி  தவிர்க்கப்பட்டது. 

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

இதையடுத்து, இவர்கள் இருவரும் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலத்தின் மூலம் அழைத்துவர திட்டமிடபட்டது. 6 மாத இடைவேளையில் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளிக்கு அழைத்துச் சென்று , பூமிக்கு அழைத்துவரும் வகையிலான ஒப்பந்தத்தை நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்குச் செல்லும் போது காலி 2 இருக்கைகளுடன் சென்றது. பின்னர், மார்ச் 19 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களுடன் பூமி திரும்பினர். இந்நிலையில், பூமி திரும்பிய பின்பு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ் , இந்தியா குறித்தும் , இந்தியாவுக்கு வருகை குறித்தும் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.