திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் நேற்று இரவு முதல் மாணவர்கள் ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருச்சி போராட்ட களத்திற்கே சென்று எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


பெண் மாணவிக்கு தொல்லை


மகளிர் விடுதியில் தனியாக இருந்த பெண் மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வாட்ஸ்-அப் குழுக்களில் பரவி மாணவர்கள் போராட்டமாக மாறியுள்ளதால் திருச்சியே பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.


தொல்லை கொடுத்த நபர் கைது


இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புகாருக்கு உள்ளான நபர் திருச்சி காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார். இருப்பினும், அலட்சியமாக மாணவியை குறைசொல்லும் வகையில் செயல்பட்ட விடுதி வார்டன் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


களத்திற்கே சென்ற எஸ்.பி. வருண்குமார்


மாணவர்களின் போராட்டம் நேரத்திற்கு நேரம் வீரியமாகிவருவதை உணர்ந்த திருச்சி எஸ்.பி. வருண்குமார் நேரடியாக போராட்ட களத்திற்கே சென்று போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – உறுதி அளித்த எஸ்.பி


ஏற்கனவே புகாருக்கு உள்ளான நபரை கைது செய்துவிட்டோம் என்றும் ,மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வார்டனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த வருண்குமார் ஐபிஎஸ், பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக அவரது அடையாளங்கள் எதுவும் வெளியில் தெரியாமல் பெண் அதிகாரியை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்