திருச்சியில் ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள புதிய பாலத்திற்கு இறங்கு தள சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகரம் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளால் மெருகடைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருந்த மிகவும் பழமையான குறுகிய ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டுமான பணி ஆனது அதன் அருகிலேயே கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த புதிய பாலமானது மத்திய பேருந்து நிலையம் திண்டுக்கல் சாலை ஜங்ஷன் ரயில் நிலைய சாலை கிராப்பட்டி பகுதி சாலை மன்னார்புரம் பகுதியை இணைக்கும் சாலை என ஐந்து சாலைகளை இணைக்கும் வகையில் இந்த புதிய பாலமானது அமைக்கப்பட்டது
இதில் மன்னார்புரம் பகுதியில் ராணுவ நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அந்த பகுதியை தவிர மற்ற 4 பகுதிகளின் போக்குவரத்திற்காகவும் இந்த பாலம் ஆனது கடந்த 2018ம் ஆண்டு திறந்து விடப்பட்டது. மன்னார்புரம் பகுதியில் இறங்குதள சாலை அமைப்பதற்கு ராணுவ நிலம் கிடைக்காததால் பாலம் அந்தரத்தில் தொங்குவதை போன்று இருந்தது.
இதனை தொங்குபாலம் என மக்கள் குறிப்பிடும் அளவிற்கு சுமார் 6 ஆண்டு காலமாக தொடர்ந்து காட்சியளித்து வந்தது. அதன் பின்னர் தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக ராணுவ நிலம் வழங்கப்பட்டு அந்த பகுதியிலும் சாலை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முழு அளவில் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இருந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் புதிய பாலம் கட்டுமான பணியானது சுமார் 138 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
இதனால் ஜங்ஷன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்கனவே திறக்கப்பட்டு ஒருவழிப்பாதையாக பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த பாலம் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. இடிக்கப்பட்ட பாலம் இருந்த பகுதியில் முதலில் தண்டவாளம் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பாலத்தை தாங்கக்கூடிய இந்த தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் சிறிது காலம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்து வந்தனர். இதற்கிடையில் திருச்சி மாநகர் தொழில் வளர்ச்சியில் அபரிமிதமாக வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், டைடல் பார்க் என்று ஏராளமான புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பாலத்தின் மேற்பகுதி கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மேம்பாலத்தில் இருந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் மத்திய பேருந்து நிலையம் செல்வதற்கும் சாலைகள் இணைப்பதற்கான இறங்குதள சாலை அமைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக வெகு வேகமாக நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மலை போல் செம்மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இறங்கு தளசாலை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்ப சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இறங்கு தள சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் மும்முரம் அடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.