தமிழ்நாட்டில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சில மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை மற்றும் வெப்ப காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலையால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அதிகரிக்கும் வெப்ப நிலையில் பல்வேறு நோய்கள் உடல் சோர்வுகள் போன்றவை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கோடை காலம் என்றாலே எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட கடந்த மார்ச் மாதம் முதல் வெப்பநிலையான பதிவு வரலாறு காணாத அளவிற்கு உள்ளது. வெப்ப நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள குளிர்பானங்கள், பழவகைகள் மற்றும் நீர் ஆதாரங்களை தொடர்ந்து பொதுமக்கள் அதிகளவில் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஹீட் ஸ்ட்ரோக் நோய் குறித்து மருத்துவர்கள் கூறியது..
அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும். அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டோரை குளிா்ந்த நிழல் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அவா்களது கூடுதல் ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயா்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா் விழிப்புடன் இருந்தால் குளிா் திரவங்களை தரலாம். தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு, நீா், உப்பு நீா் கரைசலும் தரலாம்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவா் சுயநினைவின்றி இருந்தால் அவரை வேகமாக குளிா்விப்பது அவசியம். அவரின் ஆடைகளை தளா்த்தி குளிா்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கலாம். அவரது அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ்பேக் மூலம் ஒற்றி எடுக்க வேண்டும். மின்விசிறியின் காற்று அவரது உடலில் படவேண்டும். குளிா்சாதன அறையை பயன்படுத்தலாம் என்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு..
வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவமனை டீன் நேரு கூறியது... கடும் வெயிலை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சிறப்பு சிகிச்சைப் பிரிவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிக வியர்வை காரணமாக உடலில் தேவையான உப்பு குறைந்து சோர்வு ஏற்படும். எனவே, சாதாரண குடிநீருக்குப் பதிலாக அவ்வப்போது ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சக்கரை கரைசலை நீரில் கலந்து உட்கொள்வது நல்லது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்காக ஓஆர்எஸ் கரைசல் வைக்கப்பட்டுள்ளது. உடல் சூடு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்படு வதைத் தவிர்க்க துரித உணவுகள், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, இறுக்கமான ஆடைகள் அணிவது, வெயிலில் நீண்டநேரம் சுற்றுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும், தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்திநூல் ஆடைகள் அணிய வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மோர், பத நீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்றார்.