திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூக ஆர்வலர் கமல்ஹாசன் பேசுகையில், “திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் காட்டுக்குளம் ஊராட்சியில் 2010 -2011 ஆம் ஆண்டில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் இருந்ததனால் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் மக்கள் வாழ தகுதி இல்லாத காரணத்தால் அதனை நடப்பாண்டில் 2022- 2023 சுமார் 2.30 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த கட்டடங்கள் மராமத்து பணி செய்து தற்போது பயனாளிகளை தேர்வு செய்து திறக்கும் தருவாயில் உள்ளது. மேலும் சமத்துவ புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சமுதாயக்கூடம், சமத்துவ கடுகாடு மற்றும் இடுகாடு ,மழைநீர் வழித்தடம் இல்லாத நிலை தான் உள்ளது. இது போன்ற எந்த வசதியும் இல்லை, இந்நிலையில் மக்கள் எப்படி அந்த பகுதியில் குடியிருக்க முடியும்.
மேலும் இந்த சமத்துவபுரமானது எண் 119 மற்றும் 120 கல்லாங்குத்து தரிசு பகுதிகளிலும், எண் 124 பாப்பநாயக்கன் குளத்திலும் கட்டப்பட்டுள்ளது. மக்கள் வாழ தரம் இல்லாத பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனை உரிய கட்டிட நிபுணர்கள் மற்றும் நீர்வள வல்லுனர்களைக் கொண்டு மண் பரிசோதனை செய்து ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் முறையான வகையில் சாதி, மத, இன ரீதியாக ஏழை விளிம்பு நிலை மக்களை தேர்வு செய்யாமல் , அரசியல் பின்புலத்துடன் பயனாளிகளை தேர்வு செய்து வருகின்றனர். இச்செயல் பொதுமக்களுக்கு விரோதமானது, சட்டத்திற்கு புறம்பானதும், கூட ஆகவே அரசு முறையாக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் அறிவிப்பு வெளியிட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பம் பெற்று அதில் தகுதி உள்ளவர்களை தேர்வு செய்து வெளிப்படை தன்மையோடு பயனாளிகள் பட்டியலை நாளிதழ் மற்றும் அரசு அலுவலகங்கள் மூலம் வெளியிட்டு, அவர்களுக்கு வீடு அதற்குரிய வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் மேற்கொண்ட குறைபாடுகளை சரி செய்து பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்