திருச்சி மாவட்டத்தை சென்னைக்கு நிகராக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆசிய அளவில் பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் அதே பகுதியில் லாரிகள் முனையம், காய்கறிகள் சந்தை, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பேருந்து முனையம் 80 சதவீத பணிகள் முடிக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் அகாடமி திருச்சியில் அமைக்கப்படும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று, பஞ்சப்பூரில் இடமும் தேர்வு செய்யபட்டது. இந்த பணிகள் தொடங்குவதற்கு முறையான அறிவிப்பு பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள திறமையான இளைஞர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டு நாட்டிற்கு பதக்கம் வெல்வதற்கு தீவிர பயிற்சி அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ,மு.க. ஸ்டாலின் 2022 டிசம்பரில் திருச்சியில் நடந்த விழாவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான 2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு மாநில அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை.




இந்த நிலையில் தான் தற்போது 2024-25 பட்ஜெட்டில் ஒலிம்பிக் அகாடமிக்கு மாநில அரசு நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்த திட்டத்தை பட்ஜெட்டில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா சமீபத்தில் திருச்சிக்கு வந்து திருச்சி-மதுரை சாலையில் பஞ்சப்பூரில் உள்ள உத்தேச இடத்தை ஆய்வு செய்தார். ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மற்றும் SDAT அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இது தொடர்பாக வெளியான தகவலில், ஒலிம்பிக் அகாடமியை அமைப்பதற்காக SDATக்கு பஞ்சப்பூரில் 30 ஏக்கர் ஒதுக்கப்பட்டதைத் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்க திருச்சி மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டும் இடத்துக்கு இணையாக நிலத்தை ஒதுக்க மாநகராட்சி முன்வந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மாநகராட்சியால் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 30 ஏக்கர் நிலம் போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் இடம் ஏற்கப்பட்டுள்ளது.




தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுக்க அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கவுள்ளது. விளையாட்டு பொருட்களுக்கான கிட் மொத்தமாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கேலோ இந்தியாவின் பாராட்டு விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் இத்திட்டத்தின் கீழ் அனைத்து 12,000 கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு கருவிகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய பின் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 


தமிழ்நாடு தற்போது விளையாட்டு துறை வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் விளையாட்டு தலைநகர் என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு வேகமான முன்னேற்றத்தை பெற்றுள்ளது.தொடர்ச்சியாக தேசிய, சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் நடக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டியும் நடைபெற்றது என்றார். மேலும் வருகாலங்களில் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.