திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரித்திர பதிவேடுகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து தொடர்ந்து அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்களை அச்சுறுத்தம் விதமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின்கீழ் 10-வது கட்டைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் தலை மற்றும் கை எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த லால்குடி சரக டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையில் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை செய்தனர்.




மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். அந்தப் பெண்ணுக்கு 45 வயது இருக்கலாம் என்று போலீஸார் கண்டறிந்தனர். அதன் பின்னர், எரித்துக் கொலைசெய்யப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார், கொலைசெய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்தார்? எதற்காக எரித்துக் கொலைசெய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளிட ஆற்றுப் பாலத்தின்கீழ் பெண் ஒருவர் எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்து , சந்தேகம் படும்படி அப்பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களை கண்டறிந்து விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.