வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் மொபைல் தான் எல்லாம் என்று ஆகி வருகிறது. வீட்டில் இருந்தே நமக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் சுலபமாக வாங்கிகொள்ளும் அளவிற்கு வசதிகள் வந்துவிட்டது. குறிப்பாக ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாமே இப்போது ஆன்லைனில் செய்ய முடிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.


குறிப்பாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் செயலிகள் அதிகரித்துள்ளது. இதை இன்ஸ்டன்ட் டெலிவரி செயலி என்கிறார்கள். இதில் நீங்கள் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் வீட்டிற்கே அதை டெலிவரி செய்துவிடுவார்கள். உடனடியாக தேவைப்படும் பொருட்கள் வீட்டிற்கே வருவதால் இப்போது பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வாங்கப்படும் உணவுப் பொருட்களாக இருந்தாலும்,  மளிகை பொருட்களாக இருந்தாலும் அவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் தரமற்ற பொருட்கள் இருப்பதால் அதை நாம் தெரியாமல் உட்கொழும்போது சில சமயங்களில் உயிர்பலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் .


இந்நிலையில் திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ்,  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், அவருக்கு வயது 15 ஆகும். மேலும் திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில்  11ஆம் வகுப்பு படித்து வந்தார்.


ஆன்லைன் மூலம் நூடுல்ஸ் ஆர்டர் செய்த சாப்பிட்ட சிறுமி இறப்பு 


இந்த மாணவிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்குமாம். இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும்,  சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 


இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்ட போது,  சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


மேலும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் சிறுமி இறந்ததற்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மருத்துவர்கள் அறிவுரை : 


வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலம் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆகையால் பொதுமக்கள் சத்தான உணவுப் பொருட்களை தேடிச் சென்று வாங்குவதில் பலரும் சோம்பேறி தனமாக உள்ளனர். 


ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப்பொருட்கள் தரமற்றவை என தொடர்ந்து பல சமூக ஊடங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 


பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஆன்லைன் மூலமாக குறைவான விலையில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை கட்டாயமாக வாங்க கூடாது என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.