திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் திருமண மண்டபத்தை கடந்து சென்றது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் முருகேசன் உட்கார்ந்திருந்தார். குறிப்பாக திருச்சி நகரப் பேருந்துகளில் நடத்துனருக்கு என்று தனி இருக்கை கிடையாது. அந்த பேருந்து கலையரங்கம் திருமண மண்டபத்தை கடந்து தனியார் பத்திரிகை அலுவலகம் அருகே வலது புறம் திரும்பியது. அப்போது நடத்துனர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக ரோட்டில் வந்து விழுந்துள்ளார். முருகேசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்.
இதனைதொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தனர். காயமடைந்த நடத்துனர் முருகேசனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடைந்து ரோட்டில் விழுந்து கிடந்த இருக்கையை தூக்கி பேருந்தில் வைத்துக் கொண்டு பேருந்து பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாற்று பேருந்தில் பயணிகள் சென்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பில் உறுதி செய்ய வேண்டும். அரசு பேருந்து முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். திருச்சியில் ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையோடு நடத்துனர் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களின் கருத்து
தமிழ்நாடு முழுவதும் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முறையான இருக்கை வசதிகள் இல்லை, படிக்கட்டுகள் உடைந்து உள்ளது. திடீரென்று பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே நின்று விடுகிறது. குறிப்பாக சரியான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கிக் கொண்டு சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை. திருச்சியில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாறாக அவருக்கு ஏதாவது நடந்திருந்தால் அவர் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் யார் பதில் சொல்வது? ஏன் சாதாரண மக்கள் பயணிக்கும் பேருந்தில் அரசு மற்றும் போக்குவரத்து துறை அலட்சியம் காண்பிப்பது எதற்காக என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.