திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறார். குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடியவர்களை தொடர்ந்து கண்காணித்து குற்ற சம்பவங்களில் ஈடுபட முயற்சி செய்தாலே உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் திருட்டு, கொலை ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதே சமயம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.


”24 மணி நேரமும் திருச்சியில் ரோந்து - குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது”


மேலும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழித்திட 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர்களை சீரழிக்கும் விதமாக போதை ஊசி போதை மாத்திரை போன்ற பொருள்களை விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.


போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


குறிப்பாக பள்ளி,கல்லூரி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதே சமயம் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 


இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அண்ணா நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் திருச்சி எஸ்பி தனி படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை செய்த பொழுது திருச்சி அரியமங்கலம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் நஸ்ருதீன் (24) என்பவர் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.




போதை மாத்திரை பறிமுதல், ஒருவர் கைது


மேலும் அவரிடம் இருந்து 100 எம் ஜி அளவு கொண்ட டெபென்டால் என்ற 750 போதை மாத்திரைகளையும் மேலும் போதை ஊசி போட்டுக் கொள்வதற்கான 5 சிரஞ்சுகளையும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். போதை மாத்திரையின் மதிப்பு மட்டும் ரூ 26 ஆயிரத்து 250 ஆகும்.  பின்னர் நசுருதீனை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  மேலும் நசுருதீன் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இதேபோன்று போதை மாத்திரை விற்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. 


அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.