காலணியில் மறைத்து வைத்த தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதைத்தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.


இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.அப்போது அவர் தனது காலணியின் அடிப்பகுதியில் ரூ.28.86 லட்சம் மதிப்பிலான 401.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




வெளிநாட்டு பணம் பறிமுதல்


மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு ஆண் பயணியை பிடித்து சோதனை செய்தனர் அதில்23.04.2024 அன்று ஏர் ஏசியா விமானம் AK-28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற PAX ஒன்றிலிருந்து USD 6000, இந்தியப் பணம் 5.50 லட்சம் மற்றும் மலேசிய ரிங்கிட் 1100 ஆகியவற்றை மொத்தமாக ரூ.10.65 லட்சம் பறிமுதல் செய்தனர்.  இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு  வருகின்றனர். 




கடத்தல் கூடாரமாக திருச்சி விமான நிலையம் மாறிவிட்டது


திருச்சி விமான நிலையம் சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்டு பல வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையை விட திருச்சியில் அதிக பயணிகள் விமானத்தில் பயணிக்க கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பணம், வெளிநாட்டிலிருந்து தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இந்த தொடர் திருட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்  திருச்சி விமான நிலையம் கடத்தல் செய்வதற்கு உகந்த நிலையமாக மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.