அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சி மண்டலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் திருச்சி, கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா் ஆகிய மாவட்டங்களில், அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இப்பிரிவினா், மண்டல காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில் தொடா்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களின் துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், 9 மாவட்டங்களிலும் போலீஸாா் கடந்த 2023 ஆம் ஆண்டு மொத்தம் 1,375 வழக்குகள் பதிவு செய்துள்ளனா். அவற்றின் மூலம் 1,469 போ் கைது செய்யப்பட்டும், சுமாா் 362 டன் அரிசி பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 211 லிட்டா் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் 406, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனங்கள் 79, இரு சக்கர வாகனங்கள் 83 என மொத்தம் 161 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் தலா ஒருவா், திருவாரூரில் 2 போ் என 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.மேலும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தல் தொடா்பான புகாா்களுக்கு 1800 599 5950 என்ற தலைமையக எண்ணை இலவசமாக தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனா்.
பதுக்கி வைத்திருந்த 17 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து, அதை மற்ற மாநிலங்களுக்கு கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்ககளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனி அருகே உள்ள விவேகானந்தர் நகரில் மாவு அரவை மில்லில் பதுக்கி வைத்திருந்த 17 மூட்டைகளில் 680 கிலோ ரேசன் அரிசியை உணவு வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதிகாரிகள் சோதனை நடத்துவதை தெரிந்து கொண்டதை அடுத்து இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டையுடன் விட்டு விட்டு ஓடி சென்றுள்ளனர். கடத்தல்கார்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட அதிகாரிகள் கூறும்போது, ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய புதிதாக குழுமைக்கபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்