திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 65). இவரது பேத்தி கலா (வயது 17) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பெற்றோரை இழந்த கலா பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். மேலும், திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக, திருச்சியை சேர்ந்த அவரது சித்தி மீனாட்சி, கல்லூரி விடுதிக்கு சென்றார். அப்போது கலாவின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை கண்டு அவரது சித்தி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கலாவை அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோதித்தார். டாக்டர்கள், கலாவை பரிசோதித்து விட்டு கலா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் சித்தி, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார்.


அப்போது அவர், 'திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் கர்ப்பத்துக்கு காரணம்' என்று தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கலாவை அவர் அடிக்கடி அவர்  அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.




இதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை கலைக்க அவரது சித்தி முடிவெடுத்தார். அதன்படி, திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். 


அங்கு கலாவுக்கு திடீரென ஏற்பட்ட இரத்தப்போக்கு, பலமணி நேரமாகியும் நிற்கவில்லை. அதையடுத்து அவரை மேற்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்ற கலா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் ராம்குமார், கருக்கலைப்பு செய்த சித்தி மீனாட்சி, கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் திருச்சி ராமலிங்க நகர் சுதர்சனா மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவுச் செய்துள்ளளனர். திருச்சியில், 17 வயதான மைனர் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதும், அதன் காரணமாக அவர் உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.