திருச்சி மண்டலத்திலுள்ள திருச்சி அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டத்தை சேர்ந்த 14 வட்டாரங்களுக்கு வளர்ச்சி திட்டத்தினை செவ்வனே செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில்  திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  தெரிவித்ததாவது:


மாநில அளவில் பல்வேறு வளர்ச்சி குறியீடுகளில் பின் தங்கியுள்ள 50 வட்டாரங்களை தேர்ந்தெடுத்து அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து வாழ்வாதார குறியீட்டினை உயர்த்தும் நோக்குடன் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 வட்டாரங்களில் மருங்காபுரி வட்டாரம் வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் இம்மண்டலத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 14 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செவ்வனே செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பாக, ஒருநாள் கருத்தரங்கம் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 




மேலும், வட்டார வளர்ச்சி மேம்பாட்டு பணிக்காக மாநில அளவில் 50 வட்டாரங்களை தேர்ந்தெடுத்து அரசின் பல்வேறு துறைகளின் மூலம் ஏழை மக்களின் பொது பயன்பாடுகளை மேம்படுத்துவது இரண்டாவது பிராந்தியங்களின் வளர்ச்சியை பெருக்குவதற்காக நிர்வாக இயந்திரத்தின் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள 388 வட்டாரங்களில் மொத்த மக்கட்தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை சதவீதம், மொத்த தொழிலாளர்களில் விவசாயப்பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளர்களின் சதவீதம், மொத்த பள்ளி மாணவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சதவீதம், மிகக்குறைந்த அளவு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தாய் இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், குடிசைவீடுகளின் சதவீதம், குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற வீடுகளின் சதவீதம், மண்சாலைகள் உள்ள குக்கிராமங்களின் சதவீதம் ஆகிய 9 வகையான குறியீடுகளின் படி 50 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களிலும், மாவட்ட வாரியான தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்த வட்டாரங்களில் ஒரு வட்டாரம் மட்டும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்த மாவட்ட உற்பத்தி குறியீட்டின் (GDDP) அடிப்படையில் தரவரிசையில் பின் தங்கியுள்ள 13 மாவட்டத்தில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் மற்றும் ஊட்டசத்து, சமூக நலன், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைகள் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் 187 வளர்ச்சி குறியீடுகளை (Key Developmental Indicators) (KDI's) அடிப்படையாக கொண்டு வட்டார அளவிலான திட்டம் வகைப்படுத்தப்படவுள்ளது. 




மேலும், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், வடிகால் வசதிகள், வீட்டுவசதி மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்தல் போன்ற வளர்ச்சி வசதிகளின் அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான 4-வது காலாண்டு கணக்கீட்டின்படி, வட்டாரத்தில் உள்ள பல்வேறு துறைகள் மூலம் வட்டார வளர்ச்சிக்கு தேவையான பணிகளின் விவரங்களை தேர்வு செய்து தொகுதி மேம்பாட்டு உத்தித்தாள் தயாரிக்கப்பட வேண்டும். குறிகாட்டிகளின் அடிப்படை மதிப்புகள்(2023-24) மற்றும் 2026-27 வரையிலான அதிர்வெண் மூலம் குறிகாட்டிகளின் பொருத்தமான இலக்கு மதிப்புகள், ஒருங்கிணைக்கப்பட வேண்டிய திட்டங்களின் பட்டியல்கள் மற்றும் மதிப்பீடுகள், FBDS இலக்கு மதிப்புகளை அடைவதற்கான உத்தி மற்றும் திட்டத்திற்கு தேவையான கூடுதல் நிதி உள்ளிட்ட குறியீடுகளின் அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட திட்ட குழுவின் மூலம் பணிகள் கூராய்வு செய்யப்பட்டு மாநில திட்டக்குழுவிற்கு பணிகளை சமர்ப்பிப்பது தொடர்பான கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.