விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இம்மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இந்த ஆண்டு திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையகரத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகர காவல் துணை ஆணையர்கள், அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகரில் 18.09.23 அன்று நடைபெற விருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா (சிலை பிரதிஷ்டை) மற்றும் ஊர்வலத்தின் போது முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நடத்திட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் விநாயகர் ஊர்வலம் (விசர்ஜன ஊர்வலம்) நடைபெறும் 20.09.23-ந்தேதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி ஊர்வலம் செல்லவும், அதன் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் அனைத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலைய எல்லையில் உள்ள இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிற மதத்தை சார்ந்த முக்கிய நபர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியும், திருச்சி மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, அமைதியான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்திட திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி அறிவுரைகளை வழங்கினார்கள்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்