திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரத்தம்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு திருச்சியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து டாக்டர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க முன்வந்தனர்.


 






 


மேலும், அவருடைய உடல் உறுப்புகளான இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர். இதையடுத்து தானமாக பெறப்பட்ட உறுப்புகளில் அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 24 வயது நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், இருதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. 




மேலும் மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கண்கள் 2 பேருக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு தலைமையில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மேற்பார்வையில், மருத்துவ நிலைய அலுவலர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர். இதில் சிறுநீரக மருத்துவக்குழு டாக்டர்கள் கந்தசாமி, பிரகாஷ், மைவிழிசெல்வி, ஜெயபிரகாஷ் நாராயணன் உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது அரசு மருத்துவமனையில் 18-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.