இந்தியா முழுவதும் 1946 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே தொழிற்சாலையில் விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யப்படும் சட்டத்தை அதிகாரிகள் உருவாக்கினர். அதை எதிர்த்து தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் போராட்டம் வேலை நிறுத்தம் ஆக மாறியது. அச்சமயம், தொழிற்சங்க தலைவர் அனந்த நம்பி தலைமையில் பொன்மலை சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. பொன்மலை பணிமனை முகப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மறியல் செய்தனர். எதுவரினும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்ற உறுதி அவர்களிடம் மேலோங்கி நின்றது. வேலை நிறுத்தத்தை உடைக்க ஆங்கிலேய நிர்வாகம் பல ஆசை வார்த்தைகளை காட்டி வந்தது. 30 ரூபாய் வரை சம்பளம் வாங்குற தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினால் 100 சதவீத சம்பள உயர்வு என பல ஆசை வார்த்தைகளை காட்டியது. இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் தொழிலாளிகள் துச்சமாகக் கருதி வெறுப்புடன் நிராகரித்தனர். இது மேலும் அவர்களுக்கு சிக்கலாக அமைந்தது. எப்படியாவது ரயிலை இயக்கியாக வேண்டும் என்ற வீம்புக்காக யார் யாரையோ அழைத்து வந்து ஓரிரு ரயிலை இயக்கி வந்தனர்.
ஆனால் அதுவும் கேலிக்கூத்தாக முடிந்தது. செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று பண்டிதர் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவை டெல்லியில் பதவி ஏற்றது. ஆங்கிலேயரிடமிருந்து இந்திய மக்களுக்கு அதிகார மாற்றம் செய்யப்படுவதற்கான அடையாள நிகழ்ச்சி அதுவாகும். இந்த பதவியேற்பு முடிந்து சரியாக 71 மணி நேரத்திற்குப் பின் பொன்மலையில் கொடூரமான தாக்குதல் தொடங்கியது .செப்டம்பர் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு பொன்மலை சங்கத் திடலில் வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் ஆயிரக்கணக்கானோர் கூடி இருந்தனர். தலைவரின் உரையை கேட்டு, அந்தச் சமயத்தில் ஹரிகரன் தலைமையில் பெரும் போலீஸ்படை சங்க திடலுக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். தொழிலாளிகள் கலைந்து போக வேண்டும் என்று முன்னறிவிப்பு கிடையாது. கண்ணீர்புகை குண்டு போடவில்லை. எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச்சூடு.. மலபார் சிறப்பு காவல்படை துப்பாக்கிச்சூட்டை நடத்தி கொண்டே மிருகத்தனமான தடியடி தாக்குதல் நடத்தியது.
சங்கத் திடலில் நான்கு பக்கங்கள் ஒரு பெரிய சுவர் ஒரு முட்புதர் எல்லா பக்கமும் அடைக்கப்பட்ட நிலையில் வாலிபர்களை தவிர மற்றவர்கள் தப்பிப்பது கடினமாக இருந்தது. துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள் காயமடைந்தவர்களின் உடலிலிருந்து வழிந்த ரத்தம் மைதானத்தில் சிந்திக் கிடந்தது. சங்கம் தனது இளம் செயல் வீரர்கள் 5 பேரை துப்பாக்கிச் சூட்டில் இழந்தது. 26 வயது தங்கவேலு, 28 வயது தியாகராஜன், 26 வயது ராஜு, 25 வயது ராமச்சந்திரன், 24 வயது கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து இளைஞர்கள் பலியாகினர். சங்க கட்டிடத்திற்குள் நுழைந்த போலீஸ் படை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தன் நம்பியாரின் கை கால்களை கட்டி தடியடியால் அவரை தாக்கியது. துப்பாக்கி கூர்முனையால் அவர் தலையில் இடி இடித்து படுகாயப்படுத்தியது. நம்பியார் இறந்துவிட்டதாக கருதி விட்டுச் சென்றது. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படும் காயப்பட்டனர். அட்டூழியங்களையும் புரிந்த ஆயுதப்படை சங்கத்தின் சொத்துக்களையும் சூறையாடியது. இன்று போய் பார்த்தாலும் அந்த துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நுழைவு கேட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய தடயம் இருக்கும். மிகப்பெரிய பழமையான கட்டிடம் மரணத்தின் ஓலமாக இன்றும் இருந்து வருகிறது. தொழிலாளர்களின் வீரத்தின் நினைவுச் சின்னமாக அந்த கட்டிடம் இன்று வரை கம்பீரமாக இருந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்