பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திடீரென ஒரு குடும்பத்தினர் தீக்குளிப்பதற்காக குளிர்பான காலி பாட்டில்களில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கையில் எடுத்தனர். உடனே, இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஓடிச்சென்று அவர்களிடம் இருந்த பெட்ரோல், மண்ணெண்ணை ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கர் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 42) என்பதும், அவருடன் வந்திருந்தவர்கள் அவருடைய மனைவி லதா(32), மகன் சிவமுகுந்தன்(13), மகள்கள் ஹன்சிகா(10), நிஷாந்தினி(7) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறை விசாரித்ததில் இளையராஜா தழுதாழை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுமார் 300 மீட்டர் தூரத்தில் தனக்கு சொந்தமான காட்டு நிலத்தில் பெட்டிக்கடையும், மேலும் இட்லி, பனியாரம், தட்டை பயறு உள்ளிட்டவையும் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மதுபான கூடம் (பார்) நடத்தி வருபவரின் துண்டுதலின்பேரில், தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் இளையராஜாவை அந்த இடத்தில் கடை வைக்கக்கூடாது என்று கூறி வருகின்றனர் என புகார் தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகள் அருகில் கடையை நடத்தக்கூடாது எனவும், அதனால் எங்களுக்கு வியாபார விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்து அடிக்கடி மிரட்டல் விடுத்தல் வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உடனடியாக கடையை காலி செய்யவில்லை என்றால் உன்னை கடையை அடித்து நொறுக்கி விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். நாங்கள் ஏழ்மையான குடும்பம், வயிற்றுபிழைப்புக்கு கடையை நடத்தி வருகிறோம். தற்போது தொடர் மிரட்டலால் உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் சம்பவத்தன்று அவர்கள் இளையராஜாவை தாக்கியும், கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள் என கூறினார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதே இடத்தில் கடை வைத்து நடத்த நடவடிக்கை எடுக்கவும், அடித்து நொறுக்கப்பட்ட கடையை சரி செய்யவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக இளையராஜா குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல், மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்