திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சிக்கு வந்தனர். அவர்கள் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் சந்தித்து, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் கருடமண்டபம் அருகில் காவிரி ஆற்றின் கரையில் வசிப்பவர்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கையினை எடுத்துக்கூறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களை வெள்ளப்பகுதியில் இருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் காவல்துறையை சேர்ந்த 1 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 80 போலீசார் கொண்ட திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவினர் தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும், நீச்சல் தெரிந்த போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமித்தும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேன் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, லால்குடியை அடுத்த கூகூர் மற்றும் இடையாற்றுமங்கலம், அன்பில், செங்கரையூர், ஆனந்திமேடு ஆகிய கொள்ளிடக் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட உள்ளன. இதையொட்டி லால்குடி நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நீர்வளத்துறை ஊழியர்கள் மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் லால்குடி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி செயற்பொறியாளர் கூடுதல் பொறுப்பு ராஜா ஆகியோரின் ஆலோசனைப்படி பாசன உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியம் திண்ணகுளம் மற்றும் விரகாலூர் கிராமங்களில் கொள்ளிட கரையோரங்களில் நீரின் அளவை லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், தாசில்தார் செசிலினாசுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் கூடுதல் வெள்ளம் ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிலையில் கொள்ளிடக் கரைகளில் தடுப்புகள் ஏற்படுத்த தயார் நிலையில் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு வந்து கரைகளில் அடுக்கியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்