கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றில் முக்கொம்புக்கு நேற்று மாலை நிலவரப்படி 1½ லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இன்று காவேரி, கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது.  இதனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆறுகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து 24 மணி நேரமும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.




இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விழா காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு குளித்து சாமி தரிசனம் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தற்போது படித்துறையில் உள்ள தடுப்பு வேலிகளை மூழ்கடித்தபடி காவிரியில் இருகரைகளையும் தொட்டு அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் நேற்று அம்மா மண்டபம், கருடமண்டபம் படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தடுப்பு அரண் அமைத்து பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதற்கிடையே ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் கோர்ட்டுக்கு பின்பகுதியில் காவிரி ஆறு நிரம்பி வழியும் நிலையில் இருந்ததால், அப்பகுதியில் மணல் மூட்டைகள் கொண்டு கரையை பலப்படுத்தி இருந்தனர். தற்போது ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக மணல் மூட்டைகள் ஆற்றுக்குள் சரிந்து விழுந்து வருகிறது. 




முக்கொம்பு மேலணைக்கு தற்போது 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இது கொள்ளிடத்திலும், காவிரியிலும் பிரித்து அனுப்பப்படுகிறது. ஜோடர்பாளையத்தில் இருந்து மாயனூருக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதால், காவிரியில் நீரோட்டம் அதிகரித்து காணப்படும். எனவே காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி ஆற்றில் இறங்க வேண்டாம். காவிரி கரையோர பகுதிகளில் 52 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து வெள்ளம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீரின் மேற்பரப்பில் தண்ணீர் வேகமாக செல்வது தெரியாது. எனவே, அதை தவறுதலாக நினைத்து மக்கள் ஆற்றில் இறங்கக்கூடாது. நீரின் அடியில் நீரோட்டம் வேகமாக இருக்கும் என்பதால் நீச்சல் தெரிந்தவர்கள் கூட ஆற்றில் அடித்துச்செல்லப்படும் நிலை ஏற்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண