திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


24 மணி நேர கண்காணிப்பு:


குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.


புகார் தெரிவிக்க வேண்டும்:


மேலும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் எதிர்க்கும் அஞ்சாமல் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்தும், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனைகள் செய்பவர்கள் குறித்தும் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.


குறிப்பாக திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவிக்கபட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், பொதுமக்கள் அச்சுறுத்தும் விதமாக குற்ற சம்பவங்கள், பெண்களுக்கு பாலியல் சீண்டல் போன்ற தவறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் தயங்காமல் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.




சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்த நபர் கைது...


இந்நிலையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்தவர்கள்  தம்பதிகளுக்கு  15 வயதில் பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் மனைவி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து காட்டூரை சேர்ந்த தனியார் பள்ளிக் காவலாளியான இருக்கும் ஒருவரை 2ஆம் திருமணம் செய்தார்.


இந்நிலையில் அவர் இரவில் தூங்கும்போது தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை, மனைவி கைப்பேசியில் படம் எடுத்தும் வைத்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து அடிக்கடி தனது இரண்டாவது கணவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அசன்பீவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


இந்நிலையில் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அந்த கணவரை கைது செய்து, திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 


மேலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் யார் கொடுத்தாலும் உடனடியாக காவல் நிலையத்தில் தயங்காமல் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கபபட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எஸ்.பி ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது