திருச்சி: கத்திரி வெயில் தொடங்க... அன்று மாலையே ஹாய் என்று சூறைக்காற்று சுழற்றி அடிக்க திருச்சி மக்களே உங்களை குளிர்விக்க நானும் வரேன் என கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்றும் திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக வெக்கையில் வெந்து போய் கிடந்த திருச்சி மக்களுக்கு குளுகுளுவென்று குளிர்ந்த காற்று தாலாட்டு பாட்டு போல் சிலிர்க்க வைத்து விட்டது.
திருச்சியில் நேற்றுமுன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் நகரம் இருளில் மூழ்கியது. இதனால் வந்தே பாரத் ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். தமிழகத்தில் நேற்றுமுன்தினம் கத்திரி வெயில் தொடங்கியது. ஆரம்பத்திலேயே அசால்ட் காட்டி மக்களை அலற விட்டது. தார்சாலைகளில் கானல் நீர் பளபளவென்று பரவலாக காணப்பட்டது. இதனால் சாதாரணமாக ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிக்கிடக்கும் சாலைகள் அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட் ஆன் நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி அந்தோ பரிதாபமாக காணப்பட்டது.
பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கடந்த ஒரு மாதமாக நீர் மோர் பந்தல்கள் அமைத்து, பொதுமக்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் மில்க், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழம் போன்றவற்றை வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. மே 28-ம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தில் முதல் நாளே திருச்சி மாநகரில் மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ஆரம்பித்த அன்று மாலையே சூறைக்காற்றுடன் துவங்கிய ஆலங்கட்டி மழை திருச்சி மாநகரை குளிர்வித்தது.
அக்னி நட்சத்திர தாக்கத்தை தகர்க்கும் வகையில் அன்று மாலையே பலத்த சூறைக்காற்றுடன் சுழன்று அடிக்க பட்படார் என்று பெரிய பெரிய துளிகளாக விழ ஆரம்பித்த மழை போக... போக வேகம் காட்டி கனமழையாக பெய்தது. திருச்சியில் கடந்த ஒரு மாதமாக வெளுத்தெடுத்து வந்த வெப்பம் இந்த மழையின் காரணமாக புஸ்ஸென்று அடங்கியது.
திருச்சி ஜங்ஷன், பொன்மலை, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் என பல்வேறு பகுதிகளிலும் கடும் வெப்பத்தால் வாடி வதங்கிய பொதுமக்களும் திடீர் ஆலங்கட்டி மழையால் உற்சாகத்தில் திளைத்தனர். இந்த மகிழ்ச்சி நீடித்த நிலையில், மின்வாரியம் அதற்கு வேட்டு வைத்தது. திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மாநகரமே இருளில் மூழ்கியது. திருச்சியில் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் பெய்த மழையினால் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே மின் நிலையத்தில் இடி விழுந்ததால் ரயில் சேவையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பெங்களூரில் இருந்து மதுரை சென்ற வந்தே பாரத் ரயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருச்சி பாலக்கரை ரயில் நிலையத்தில் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பலருக்கு அப்பகுதியினர் உதவி செய்து ரயிலில் இருந்து தத்தம் இருப்பிடங்களுக்கு தனியார் வாகனங்கள் மூலம் சென்றனர்.
பின்னர், டீசல் இன்ஜினை வைத்து வந்தே பாரத் ரயில் திருச்சி ஜங்ஷன் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டது. பின்னர் ரயில் பயணிக்கும் தடத்திற்கு மின்விநியாகும் வழங்கப்பட்டதை அடுத்து ரயில் சேவை சீரானது. இதேபோல் நேற்றும் திருச்சியின் புறநகர் பகுதிகள், சுற்றியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் அக்னி நட்சத்திரத்தின் வெக்கை தணிந்து மக்கள் குளிர்ந்த காற்றால் மனம் மகிழ்ந்தனர்.