புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்னையின் தீவிரம் கொஞ்சம், கொஞ்சமாக அடங்கி வரும் நிலையில், மீண்டும் அதே மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோயில் திருவிழாவில் வன்முறை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மெதுவாக தொடங்கிய வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி, மிகப்பெரிய சண்டையாக உருவெடுத்தது.

Continues below advertisement

குடிசைகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் கொளுத்தப்பட்டன

இந்த சண்டையில் உஷ்ணமான ஒரு தரப்பினர், இன்னொரு தரப்பினர் வாழும் பகுதிக்கு சென்று குடிசைகளுக்கு தீ வைத்தனர். அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டன.  இதனால், வடகாடு பகுதியே கலவர பூமியாக காட்சியளிக்கத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் காயமடைந்தவர்களின் கதறல், நெருப்பு புகை, பாட்டில்கள் என அங்கு நிரம்பி கிடந்ததால் குழந்தைகள், பெண்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசார்

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார், உடனடியாக களத்திற்கு வந்து வன்முறை தீவிரமாகாமல் கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அவர்கள் அனுப்பி வைத்தனர்.

14 பேர் கைது

இந்த சம்பத்தில் தொடர்புடையவர்களாக கருதி 14 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த பகுதியில் இந்த சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்களை கண்டறியும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி – அமைச்சர் ஆய்வு

இந்த விவகாரத்தை அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.