வெண்ணெய் பரோட்டா, மைசூர் மசாலா தோசை, கல்யாண ரசம்.. கலக்கும் திருச்சி ”குரு க்ருபா” உணவகம்

பன் புரோட்டா ,மைசூர் மசாலா தோசை போன்ற வெரைட்டி வெரைட்டியான உணவுகள் அசத்தலான சுவை..

Continues below advertisement

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள 'குருக்ருபா' எனும் உணவகத்தில் தான் இத்தகைய வித்தியாசமான உணவுகள் கிடைக்கின்றன. இந்த உணவகத்தில் முட்டை, டால்டா, பாமாயில் என்று எதுவுமே பயன்படுத்தாமல் வெண்ணை மட்டுமே சேர்த்து செய்யப்படும் பரோட்டா வேற லெவல் டேஸ்ட். இந்த உணவகத்தை பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம். ஸ்ரீரங்கம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே உள்ளது இந்த குரு க்ருபா ஓட்டல். இந்த உணவகத்தின் உணவுகளும் வாசனையும் நம்மை உள்ளே இழுக்கிறது. மேலும் இங்கு கிடைக்கும் சைவ பன் பரோட்டா, மைசூர் மசாலா தோசை, அதற்கு கிடைக்கும் சின்ன வெங்காய சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி ஆகியவை அனைத்தும் அருமையாக இருக்கும் என்று இங்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

Continues below advertisement


பழங்கால தூண்களுடன் எழுப்பப்பட்ட, பாரம்பரியமான வீடு போன்ற அமைப்பில் உள்ளது இந்த உணவகம். உள்ளே நுழைந்தவுடன் உரிமையாளரின் வரவேற்பும், உபசரிப்பும் சிறப்பாக இருக்கின்றது. மைசூர் மசால் தோசை, ரவா தோசை, சைவ பரோட்டா போன்றவற்றை தான் அனேகமானோர் வாங்கி சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு உணவும், ஒவ்வொரு சுவையில் செய்து கலக்கி கொண்டிருக்கும் இந்த உணவகத்தில் வீட்டிலேயே தயாரித்த மாவைக் கொண்டு தான் உணவுகளை செய்கின்றனர். இங்கு கிடைக்கும் மசால் தோசையானது, மற்ற கடைகளில் கிடைக்கும் மசால்தோசைகளிலிருந்து அதிகமாகவே மாறுபட்டதாக இருக்கும் என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவும் தோசைக்கு கிடைக்கும் சின்ன வெங்காய சாம்பார், மற்றும் கார சட்னி, தேங்காய் சட்னி ஆகியவை உடன் வைத்து சாப்பிடும் போது அமிர்தம் போல் இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். மேலும், சைவ புரோட்டா முட்டை, டால்டா, பாமாயில் என்று எதுவுமே பயன்படுத்தாமல் வெண்ணெய் மட்டுமே சேர்த்து செய்யப்படுவதால் இதன் ருசி அற்புதமாகவும் இருக்கும் என்று வாடிக்கையாளர் தெரிவிக்கின்றனர். 


கடை உரிமையாளர் துவாராகநாத்திடம் பேசியபோது, "கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடமாக நானும் என் மனைவியும் சேர்ந்து கேட்டரிங் நடத்திக் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். முதலில் வீட்டிலேயே வாடிக்கையாளர்களுக்கு சமைத்து கொடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி, உணவகத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்து 'குரு க்ருபா ஹோட்டல்' என்று பெயர் வைத்து நடத்திக் கொண்டு வருவதாக" தெரிவித்தார். மேலும் இங்கு வேலை செய்யும் பலரும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார். காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்று தெரிவித்த அவர், காலையில் டிபன், மதியம் சாப்பாடு, ஈவ்னிங் டிஃபன் என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் என்றும் தெரிவிக்கின்றார்.

மேலும் தினமும் ஒரு வகை குழம்பு தினமும் ஒரு வகை ரசம் என்று வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சமைக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். சைவ உணவகம் என்பதால் பரோட்டாவை முட்டை பயன்படுத்தாமல், அதேபோன்று டால்டா பாமாயில் போன்றவை யும் பயன்படுத்தாமல் வெண்ணெய் பயன்படுத்தி செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். அதிலேயே பன் புரோட்டா, கொத்து பரோட்டா என்று வெரைட்டியாக செய்து கொடுக்கிறோம். தொடர்ந்து எந்த கலப்படமும் இல்லாமல் செக்கில் ஆட்டும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் வீட்டில் உருக்கும் வெண்ணை இதெல்லாம்தான் பயன்படுத்துகிறோம். இதன் காரணமாகத்தான் எங்கள் கடையை மக்கள் தேடி வருகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் துவாராகநாத் தெரிவித்தார்.


மேலும் இங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "இங்கு கிடைக்கும் உணவுகளின் சுவையை எங்குமே அனுபவித்ததில்லை என்று இங்கு சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் போன்ற எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார். அதேபோல இங்கு கிடைக்கும் மசால் தோசைக்கு நான் அடிமை. காரம், உப்பு என்று எல்லாமே அளவாக இருக்கும். மதிய சாப்பாட்டுக்கு இவர்கள் கொடுக்கும் பொரியல், கூட்டு எல்லாமே ருசியாக இருக்கும். தக்காளி -  பூண்டு ரசம், மைசூர் ரசம், கல்யாண ரசம் என்று ரசத்துக்காகவே கணிசமான கூட்டம் வரும்" என்று தெரிவித்தார். 

எனவே காலை, மதியம், மாலை, இரவு என்று அனைத்து வேளைகளிலும்  உணவு உண்ண ஏதுவான இடமாக இந்த 'குருக்ருபா ஹோட்டல்' திகழ்ந்து வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து விட்டு, அப்படியே 'குருக்ருபா' உணவகத்திலும் சாப்பிட்டு விட்டு சென்றால் மனதிற்கு மட்டுமல்லாமல், உடலுக்கும் நிம்மதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Continues below advertisement
Sponsored Links by Taboola