திருச்சியில் முக்கொம்பு, கல்லணை போன்ற அணைகளை பற்றி நாம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பொன்னணியாறு அணையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்றால் பெரும்பாலானோர் கூறும் பதில் இல்லை என்பதே. அப்படிப்பட்ட ஒரு அணை மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. அந்த இடத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம். திருச்சியிலிருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் மணப்பாறை அருகே அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. பொன்னணி ஆறு அணை இயற்கையை தன்னுள் கொண்ட ஒரு அழகான இடமாகும். இங்கு சென்று வந்தால் ஒருவகையான மன நிம்மதி கிடைக்கும். மேலும் செல்லும் வழி எல்லாம் இயற்கை சூழ்ந்து நம்மை வரவேற்கும். இந்த அணை கடவூர் தாலுகாவில் பூஞ்சோலை எனும் ஊரில் வனப்பகுதியில் உள்ள செம்மலை, பெருமாள் மலைகளுக்கு இடையில் தும்பச்சி, மாமுண்டி, அறியாறு போன்ற ஆறுகளில் வெள்ளக் காலத்தில் ஏற்படும் நீர்ப்பருக்கைத் தடுக்க கட்டப்பட்டது. இது1975ஆம் ஆண்டு கட்டப்பட்ட அணையாகும். இங்கே இருந்து குடமுருட்டி ஆறு ஆக மாறி இது காவிரியில் கலக்கிறது. மேலும் இந்த அணையின் நீர், கிட்டத்தட்ட 3500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கு பயன் தருகிறது. மேலும் பல ஏரிகளுக்கும், குளங்களுக்கும் இந்த அணையின் நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு அணையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இந்த அணையின் ஒரு பகுதியில் பூங்காவை அமைத்துள்ளது.




அதற்கு ஏற்றார் போல், இந்த அணைக்கு செல்லும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே இயற்கையால் சூழப்பட்டு, அங்கிருந்து வரும் மண்வாசனை நம் மனதை மகிழ்ச்சி ஆக்குகிறது. மலைகளின் இடையே செல்லும்போது அங்குள்ள பறவைகளின் சத்தமும் நம் மனதிற்கு இதமானதாக உள்ளது. பலர் குடும்பத்தினருடன் வந்து கண்டு களிக்கின்றனர். மேலும், இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் நாளை கழிப்பதற்காக இங்கு வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா தளத்தை சுற்றிப் பார்க்க வந்தவர்கள், குழந்தைகளுடன் வரும்போது அப்படியே அருகில் உள்ள பூங்காவில் சிறிது நேரம் விளையாடி விட்டு செல்கின்றனர். இத்தகைய சூழலில் இந்த இடத்தைப் பார்க்கும்போது மனது லேசாவதை உணர முடிகிறது. 




எனவே நமக்கு என்னதான் வேலைப்பளு, மன அழுத்தம் என்பது தினமும் இருந்து கொண்டே இருந்தாலும் இத்தகைய இடத்திற்கு வரும்போது மன நிம்மதி கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், சுத்தமான மூலிகை காற்று, பறவைகளின் சத்தம், இயற்கையான சூழல் ஆகியவற்றை அனுபவிக்கும்போது ரிலாக்சாக இருக்கும். இங்கு உள்ள மக்களுக்கு இந்த அணைதான் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக இருப்பதாக, அங்கு சுற்றிப் பார்க்க வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எந்தவிதமான மாசு, வாகன இரைச்சல் இல்லாமல் குடும்பத்துடன் இங்கு வந்தால் ஜாலியாக என்ஜாய் பண்ணி விட்டு செல்ல அற்புதமான இடம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டும் என்று நினைத்தாலே முதலிடத்தில் இருப்பது இந்த பொன்னணி  ஆறு டேம் தான் என்று தெரிவிக்கின்றனர். 




எனவே இந்த அளவுக்கு மக்களிடையே ஒரு வரவேற்பை பெற்றுள்ள இந்த பொன்னணியாறு அணை, நீண்ட காலமாக தூர்வாரப்படாமல், பராமரிக்கப் படாமல் இருப்பது இங்கு இருக்கும் மக்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது. மேலும் இங்கிருக்கும் பூங்காவும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு அரசும், அதிகாரிகளும் செயல்பட்டால் திருச்சியில் சிறந்த சுற்றுலா தலமாக இந்த பொன்னணியாறு அணை விளங்கும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே, இந்த பொன்னணியாறு சிறப்பை பலரும் அறிந்து கொள்ள அரசு இதை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தங்கள் பகுதியில் இருக்கும் இந்த அற்புதமான சுற்றுலாத் தலத்தை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.