”ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.அதில் வி.சி.க 43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது. அதில் 27 ஒன்றிய கவுன்சில்  இடங்களையும் 3 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அனைத்து தரப்பு மக்களும் வி.சி.கவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது. மேலும் பா.ஜ.க வும் சங்பர்வார் இயக்கங்களும் சமூக நீதிக்கு எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு  வருகின்றனர். பா.ஜ.க ஒருபுறம் சமூக நீதியை ஆதரிப்பது போலவும் மறுப்பக்கம் அதற்கு சவக்குழி தோண்டும் வேலையையும் செய்து வருகிறது.இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க  ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது.




தஞ்சை கும்பகோணம் அருகே பிரபாகரன் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.அந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 15 ஆண்டுகளாக கெளரவ கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாகி  நடந்து வருகிறது.வட மாநிலத்தை விட தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைகள் குறைவாக இருக்கும் ஆனால் தற்போது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை அவசர சட்டமாக இயற்ற வேண்டும்.விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது.நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம்.தமிழ்நாட்டில் அதிகம் கவனிக்க கூடிய வெற்றியாக தி.மு.க கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது.




அ.தி.மு.கவிற்கு வலிமையான தலைமை அமையவில்லை.பா.ஜ.க வை சார்ந்து இயங்கும் வரையில் அ.தி.மு.க விற்கு இந்த சரிவு தொடரும்.அ.தி.மு.க வினரால் தலைவர் பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை.அ.தி.மு.க வில் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை. அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டேன் என அறிவித்து விட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது.தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்ல அனுமதி கேட்டுள்ளார் அவருக்கு அதற்கு உரிமை இருக்கிறது அவரை யாரும் தடுக்க முடியாது.அவருக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கிறது.


இந்த அதிகாரத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக பா.ஜ.க அரசு இருக்கிறது. நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டுவது பாரட்டத்தக்கது. தமிழ்நாடு சட்டபேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர்,குடியரசு தலைவர் ஆகியோரிடம் கையெழுத்துப்பெற்று தர வேண்டியது பா.ஜ.க அரசின் கடமை. நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வை தி.மு.க கொண்டு வரும் என நம்புகிறோம். என்கவுண்டர், மரண தண்டனை கூடாது என்பது தான் வி.சி.க வின் நிலைப்பாடு. சட்ட ரீதியாக தண்டனை வழங்குவது தான் சரியான நடைமுறை. காந்தியின் மிக முக்கியமாக கோரிக்கைகளின் ஒன்று மது விலக்கு.தி.மு.க அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆளும் பா.ஜ.க அரசு அதற்கான சட்டத்தை  கொண்டு வர வேண்டும்” என பேசியுள்ளார் எம்.பி., திருமாவளவன்