திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கியுள்ளார்.
திருச்சி மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு முகாம் நாள் 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கவும், 100 சதவீத சாதனை அடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இடம் பெயர்ந்தோர் (Migrants), நாடோடிகள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் மற்றும் குடிசைப் பகுதியில் வசிப்போர் ஆகியோரின் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி 03.03.2024 முதல் 09.03.2024 வரை நகர் நல மையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள். ஏர்போர்ட் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் முகாம் அமைத்து 3.03.2024 முதல் 5.03.2024 ஆகிய 3 நாட்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். மேலும் தேவையான அனைத்து இடங்களிலும் நிலையான ஒலிபெருக்கி விளம்பரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள முதன்மை மருத்துவ அலுவலர்களுக்கும் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மருத்துவர்களுக்கும் அறிவுரை வழங்கி 03.03.2024 முதல் 09.03.2024 வரை மருத்துவமனைக்கு வரும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் (நோயற்ற) போலியோ சொட்டு மருந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கவும், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், உலக வங்கி உதவி பெறும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர், வட்டார அளவில் அனைத்து ஊட்டச்சத்து அலுவலர், மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆயா ஆகியோரை 03.03.2024 முதல் 09.03.2024 போலியோ சொட்டு மருந்து முகாமில் தவறாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முதல்நாளே தகுந்த முன்னேற்பாடுகளுடன் கலந்து கொண்டு பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்குதல், அங்கன்வாடி மையங்கள் திறந்து இருத்தல் எவ்விதமான மாற்றுப்பணிக்கும் மேற்கண்ட தினங்களில் மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களை அனுப்பாமல் போலியோ சொட்டு மருந்து முகாமில் திறம்பட செயலாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் அமைப்பாளர்களை போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொள்ள செய்து பள்ளிகளில் முகாம் நடத்த அனுமதி வழங்க வேண்டும், தேசிய மாணவர் படை, மற்றும் தேசிய சமூக சேவை இயக்க மாணவர்களை முகாமில் பங்கு கொள்ளவும் ஏற்பாடு செய்திட வேண்டும். அரசு பணிமனை கண்காணிப்பாளர் அனைத்து அரசு ஊர்திகளும் ஓடும் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
திருச்சி தமிழ்நாடு மின்வார வாரியம், கண்காணிப்பு பொறியாளர், தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் முடியும் வரை 03.03.2024 முதல் 09.03.2024 வரை மின் தடை ஏற்படா வண்ணம் தொடர் மின் வசதி வழங்கிட அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளுக்கும் ஏற்பாடு செய்யவும் மேலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் (IMA/IAP) அவர் தம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள அலுவலர்களுடன் இணைந்து பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். திருச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையம் மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.