சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தனது வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் ஆக “I AM WATING” என பதிவு செய்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அதிரடிக்கு பெயர் போன வருண்
திருச்சி எஸ்.பியாக வருண்குமார் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் வருண்குமாருக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழ்நாடு முழுவதும் கவனம் பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக மாறினார். பொதுவாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட மற்ற போலீஸ் அதிகாரிகள் தயங்கும் நிலையில், அதனை உடைத்து பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளித்து அதை நிவர்த்தி செய்வது முதல் மிரட்டுபவர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களை பின்னங்கால் பிடரியில் பட ஓட வைப்பது வரை எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாக மனதில் பட்டதை பதிவிட்டு வந்தார் வருண்குமார்.
சாட்டை துரைமுருகன் முதல் சவுக்கு சங்கர் வரை
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது, பிரபல யூடுபர் சவுக்கு சங்கர் கைது, திருச்சியை ஆட்டிப்படைத்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் என தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் ‘இதுதாண்டா போலீஸ்” என பலரையும் வியப்பில் ஆழ்த்தினார் வருண்குமார்.
அண்ணா பதக்கம் அறிவிப்பு
இந்நிலையில், சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு வழங்கபப்டும் முதல்வரின் “அண்ணா விருதை” வருண்குமாருக்கு அறிவித்து அவரது பணியை கவுரவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
நேரடியாக பொதுமக்கள் எஸ்.பியிடமே புகார் சொல்லலாம்
இப்படியான சூழலில் அவர் திருச்சி எஸ்.பியாக பதவியேற்ற நாளிலேயே பொதுமக்கள் நேரடியாக எஸ்.பியிடம் புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டும் புகார்களும் குவிய, அவரே நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தார். திருச்சி காட்டுப் பகுதிகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படும் தகவல் கிடைத்ததும் இரவு என்று கூட பாராமல் நேரடியாக அவரே அங்கு சென்று ஊறல்களை அழித்து குற்றவாளிகளை கைது செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் நடந்து வந்த மணல் கடத்தலை கட்டுப்படுத்தியும் ஒரு நம்பர் லாட்டரிக்கு எதிராக அவர் எடுத்த கடும் நடவடிக்கைகளாலும் திருச்சி மக்கள் மத்தியில் காவல்துறையினருக்கு நல்ல பெயரும் காவல்துறை மீது பயமற்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.
ஐ எம் வெயிட்டிங் – என்ன சார் செய்யப்போறீங்க?
இந்நிலையில், பொதுமக்கள் தயக்கமின்றி தன்னை தொடர்புகொண்டு குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் வருண்குமார் ஐ.பி.எஸ்
அரிசி திருடுவது, நில அபகரிப்பு, போலி பத்திரம் தயாரித்தல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம், ஹவாலா, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கூலிப்படை மூலம் மிரட்டல், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, திரள்நிதி என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பது என எந்த குற்றமாக இருந்தாலும் மக்கள் தைரியமாக தன்னை தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான தொடர்பு எண்ணாக 9487464651 என்ற எண்ணையும் அவர் பகிர்ந்துள்ளார்.
குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்பதை குறிப்பிடும் விதமாக “I am waiting” என தனது வாட்ஸ்-அபில் ஸ்டேடஸ்ம் வைத்திருக்கிறார் வருண்குமார்.