திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் SDPI கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையேற்றார். 


இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. 


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியது.. 


பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை நசுக்கும் தீய நோக்கத்துடனுடம், வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்துடனும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளது. ஆகையால் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றார். 


மேலும் விளைநிலங்கள், குடியிருப்புகளை அழித்து திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை வழங்கியுள்ள ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தொடர்ந்து போராடும் மக்களுக்கு எஸ்டிபிஐ கட்சி எப்போதும் துணை நிற்கும். 


குறிப்பாக நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோருகிறது. தமிழகத்திலும் இச்சட்டத்தை இயற்றி சிறுபான்மை பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரியாக திகழ வேண்டும் எனவும் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது என்றார். 




பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சறுக்கல் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது..


தமிழக அரசு பள்ளிகளில் மத அடிப்படையிலான, சமூகநீதி கருத்துக்களுக்கு எதிரான மற்றும் பிற்போக்கான கருத்துக்களை திணிக்கும் வகையிலான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. யோகா பயிற்சி, தியானப் பயிற்சி, உடற்கல்வி பயிற்சி, நல்லொழுக்கப் பயிற்சி என பல வழிகளில் அரசு பள்ளிக்குள் பல மதவாத சிந்தனை குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.


இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருந்த நிலையில், சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வு மூலம் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தங்களை திராவிட மாடல் என்றும், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் என்றும், சமூக நீதியின் காவலர்கள் என்றும் பேசிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் ஆட்சியில் தான் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ச்சியாக அவலங்கள் நடந்து வருகின்றன. இனிவரும் காலங்களில் இது போன்ற எந்த நிகழ்வும் நடக்காமல் இருக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்  




விசிக மதுவிலக்கு மாநாடு நாட்டிற்கு அவசியம்


தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து நாங்கள் கோரிக்கையை எழுப்பி வருகிறோம். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது, இவற்றுக்கு எல்லாம் மூல காரணம் மது மட்டுமே. 


தமிழகம் தற்போது மதுவால் மூழ்கியுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த மாநாடு நாட்டிற்கு மிகவும் அவசியம்.. மதுவிலக்கு குறித்து யார் போராடினாலும், குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு நிச்சயம் இருக்கும். 


SDPI கட்சி சார்பாக நவம்பர் 16 ஆம் தேதி மாபெரும் பேரணி.. 


முஸ்லிம்களுக்கு சமூக-பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில், முறையான இடஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆகவே, சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை வாக்குறுதிபடி விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசு, விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் தேதி சென்னையில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்த எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.