திருச்சி: குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ நீங்க உடனே குடிநீர் பிரச்சனைகளை பதிவு செய்ய திருச்சி மாவட்ட நிர்வாகம் புதிய உதவி எண்களை அறிவிச்சு இருக்காங்க.
திருச்சி மாவட்ட நிர்வாகம் கிராமப்புற மக்களுக்காக உதவி எண்களை அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடனே புகார் அளிக்கலாம். காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், திருச்சி மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சனைகளை தெரிவிக்க உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எண்களில் கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது குடிநீரின் தரம் சரியில்லை என்றாலோ இந்த உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைகளை கவனிக்க உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து மக்கள் குடிநீர் கிடைக்கவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம். இதற்காக 0431 - 2464058 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது 94882-37844 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. அதனால் குடிநீர் விநியோகத்தை சீராக வைக்க மாவட்டம் நிர்வாகம் முயற்சி செய்கிறது. நேற்று திருச்சியில் அதிகபட்சமாக 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குடிநீர் தொடர்பான எந்த பிரச்சினையும் இருந்தால் உடனே உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாகவோ அல்லது மின் தடை ஏற்பட்டாலோ குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இதுபோக குடிநீர் பிரச்சனை எதாவது இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அளித்த உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். எனவே திருச்சி பகுதியை சேர்ந்த கிராமப்புற மக்கள் இந்த எண்களை மறக்காமல் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். கோடைகாலத்தில் குடிநீரின்றி மக்கள் தவிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி எண்களில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை முறையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.