திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களின் நடத்தையை கண்காணிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 


மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.


குறிப்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் தனிப்படை காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அந்த சமயத்தில் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றி பிரிந்தாலோ அல்லது சரித்திர பதிவேடுகள் இருக்கக்கூடிய ரவுடிகள் உரையிடத்தில் கூடினாலோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவுடி ரங்கன் திருவெறும்பூர் அருகே முருக்கூரில் உள்ள தனது சகோதரி குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று விட்டு, தனது நண்பர்களான திருவனைக்கா பாரதி தெருவை சேர்ந்த ரவுடி அஷ்டபுஜன் (எ) ஜீவா, திருவனைக்கா தெற்கு உள்வீதியை சேர்ந்த ரவுடி டெங்கு மணி (எ) அருண்குமார், உள்ளிட்ட 9 பேருடன் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.




திருச்சி அருகே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது.. 


அப்போது அங்கிருந்த, வேங்கூரைச் சேர்ந்த சிவகுமார், தினேஷ், பரணி ஆகியோருக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூர் போலீஸார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் மதுபான கடையில் அடிகடி தகராறு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மேலும் எந்த குற்றச்சம்பவங்களும் நடக்காத வண்ணம் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்  ஈடுபட்டனர். 


இந்நிலையில் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் பகுதியில் ரவுடிகள் ஜீவா மற்றும் அருண்குமார்  ஆகியோரை விசாரணை செய்வதற்காக போலீசார் சென்றனர் அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடினர். 


மேலும் ரவுடிகளை பிடிக்க  போலீஸார் விரட்டி சென்றனர் அப்போது ரவுடி ஜீவா அருகிலிருந்த குவளை வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் ஜீவாவின் கால் முறிந்தது. இதையடுத்து போலீஸார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, ஜீவாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


மேலும், அருண்குமாரை திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி ரங்கன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பொதுமக்களை அச்சுறுத்து விதமாக குற்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சரித்திர பதிவேடுகள் இருக்கக்கூடிய ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.