திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த மோகன் என்பவரது மகன் ராஜேந்திரன் (35), இவர் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் அருகே தேனீர் கடை நடத்தி வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இரவு ராம்ஜி நகரை சேர்ந்த சங்கர், சந்தோஷ் ஆகிய இருவரும் பைக்கில் பிராட்டியூர் நோக்கி சென்றனர். அப்போது அவ்வழியே லோடு ஆட்டோ ஓட்டிவந்த மாமலைவாசனுக்கும், ராம்ஜிநகரை சேர்ந்த சங்கர், சந்தோஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டீக்கடை உரிமையாளரான ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இருப்பினும் லோடு ஆட்டோவில் இருந்த மாமலை வாசன் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேர் நள்ளிரவில் மீண்டும் டீக்கடை உரிமையாளர் ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியதுடன் கடையை அடித்து நொருக்கி, அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட காரையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் மாமலை வாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அடிதடி சம்பவத்தில் மாமலை வாசனுக்கு துணையாக இருந்த பாலசுப்பிரமணியன் தேனி அருகே தலைமறைவான நிலையில் டீக்கடை உரிமையாளரான ராஜேந்திரனின் தம்பி ராஜமாணிக்கம் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியும், கட்டையால் தாக்கியும் கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம் மற்றும் அவரது நண்பர்கள் சங்கர், தர்மராஜ், மோகன், நீலமேகம் சம்பத், சம்பத்குமார் மயிலாடுதுறை வடிவேல், மணிவேல், பிரபு, மோகன் ராஜ், ஜம்புலிங்கம் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு திருச்சி மூன்றாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த 10 பேரும் இந்த வழக்கை நடத்தி வந்தனர், இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பாலசுப்பிரமணியன் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜமாணிக்கம் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், மேலும் கொல்லப்பட்ட பாலசுப்பிரமணியனுன் உடன் இருந்த ஆறுமுகம் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறி தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த தீர்ப்பை அடுத்து 10 பேரும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.