தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தமிழகம் முழுவதும் 1,500 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்கள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர்.


இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இருந்தால் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந் தேதி திருச்சி 6-வது ஜே.எம். கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். வழக்கு விசாரணையில் எதிர்தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் போலீஸ் சூப்பிரண்டு மனு தாக்கல் செய்ய முடியும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.




இதையடுத்து அன்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் புதிதாக மனு தாக்கல் செய்தார். அப்போது ஆஜரான 13 பேரின் வக்கீல்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்ததால் விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். தென்கோவன் என்ற சண்முகம் மட்டும் தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தார். மற்ற 4 பேர் ஆஜர் ஆகவில்லை.


இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு, மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி  17ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, 14-ந் தேதி ஆஜர் ஆகாத 4 பேரும் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தென்கோவன் என்ற சண்முகம் தவிர உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை மற்றும் சான்றிதழை  21-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட்டர்.




இதனைத் தொடர்ந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி முதல் கட்டமாக 6 பேருக்கும்,  19ஆம் தேதி 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  இந்நிலையில் கடலூர் சிறையில் இருந்த செந்தில் என்பவருக்கு அங்கேயே அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்த 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்றனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில்  12 பேரின் மருத்துவ அறிக்கையை, சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்தனர்.


இதனை தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது திருச்சி நீதிமன்றம்.  மேலும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இரண்டு மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.  உண்மை கண்டறியும் சோதனையின்போது வழக்கறிஞர்கள் உடன் இருக்கவும் நீதிமன்றம் அனுமதி தங்களுடன் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். உண்மை கண்டறியும் சோதனை எப்போது ? எங்கு நடைபெற உள்ளது என சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.