திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரிப் பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015 நவம்பரில் ரூ.1.35 கோடி, 2018 மார்ச்சில் ரூ.35 லட்சம், 2018 செப்டம்பரில் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக் குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ.6.87 கோடி ஒதுக்கீடு செய்து. கடந்த செப்டம்பர் மாதம்  10-ந்தேதி இரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதி அளிக்கபட்டு இருந்தது. மேலும் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவது மந்தமாகவே இருந்தது. ஆகையால் உடனடியாக காவிரி பாலத்தில் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததை நமது ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 




திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிக்கை:


திருச்சி சத்திரப் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள 5 மாதகாலம் ஆகுமாதலால், மேற்படி காவிரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை கடந்த செப்டம்பர் மாதம் 10.9.2022 அன்று முதல் இருசக்கர வாகனங்கள் நீங்கலாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் பாலத்தூண்களின் மேல் அதிர்வு தாங்கிகள் ( Elastomeric Bearings ) பொருத்தும் பணி ஒவ்வொரு தட்டுகளாக ( Deck Slabs) மேற்கொள்ளும் நிலையில் தட்டுகளின் தளமட்டம் மாறுபாட்டிற்கு உள்ளாகும் என்கிற காரணத்தால், இருசக்கர வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பணி வரும் 21.11.2022  முதல் துவங்க உள்ளதால் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க 20.11.2022 நள்ளிரவு முதல் பாலத்தில் செல்லும் இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்து முன்னர் அறிவிக்கப்பட்டபடி இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களும் கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல உத்தரவிடப்படுகிறது.


 




போக்குவரத்து மாற்றம் :


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவேரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ஓயாமரி வழியாக ( காவிரி தென்கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை ( சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை ) பழைய பாலத்தின் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான்  சாலை ( காவேரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோயில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து இடது புறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து. வலது புறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடது புறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை ( சென்னை - திருச்சி - திண்டுக்கல் - சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலது புறம் திரும்பி ஒயாமரி வழியாக ( காவேரி தென்கரை சாலை) அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து ,புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவேரி புது பாலம் வழியாக நெ.1 டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1 டோல்கேட் அடைந்து காவிரி புது பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.




மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒயாமரி வழியாகச் சென்று இடது புறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவேரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1 டோல்கேட் சென்று செல்லலாம். காவேரி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை ஒட்டி மேற்கண்ட மாற்று பாதையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களும் பயணம் செய்து நல் ஒத்துழைப்பு வழங்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.